எட்டிப்பட்டி தூவல் நீர்வீழ்ச்சி சுற்றுலா தலமாக அறிவிக்கப்படுமா?


எட்டிப்பட்டி தூவல் நீர்வீழ்ச்சி சுற்றுலா தலமாக அறிவிக்கப்படுமா?
x
தினத்தந்தி 25 Oct 2021 5:33 PM GMT (Updated: 25 Oct 2021 5:33 PM GMT)

எட்டிப்பட்டி தூவல் நீர்வீழ்ச்சி சுற்றுலா தலமாக அறிவிக்கப்படுமா?

ஊத்தங்கரை, அக்.26-
ஊத்தங்கரை அருகே எட்டிப்பட்டி தூவல் நீர்வீழ்ச்சி சுற்றுலா தலமாக அறிவிக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்ப்பாப்பில் உள்ளனர்.
தூவல் நீர்வீழ்ச்சி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது எட்டிப்பட்டி கிராமம். இந்த கிராமத்தின் வழியாகதான் தென்பெண்ணை ஆறு ஓடுகிறது. தென்பெண்ணை ஆற்றின் அருகில் திறந்தவெளியில் திரும்பும் திசையெல்லாம் மிகப்பெரிய பாறைகள் அமைந்துள்ளன. அந்தப் பாறையின் இடையே தூவல் நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சியில் எப்போதும் தண்ணீர் விழுந்து கொண்டே இருக்கும்.
ஒகேனக்கல் ஐந்தருவி எப்படி உள்ளதோ, அதேபோன்று தூவல் நீர்வீழ்ச்சி அழகாக உள்ளது. இந்த நீர்வீழ்ச்சியை சுற்றி சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலையில் பாறைகள் அமைந்துள்ளன. தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களை இணைக்கும் இடமாகவும் இது உள்ளது. இந்த நீர்வீழ்ச்சியை சுற்றி மலைகள், காடுகள் என இயற்கை எழில் மிகுந்த இடமாக உள்ளது. 
சுற்றுலா தலம்
எட்டிப்பட்டி தூவல் நீர்வீழ்ச்சியை பார்ப்பதற்கு தினமும் செங்கம், ஊத்தங்கரை, திருப்பத்தூர், சிங்காரப்பேட்டை பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். போதிய பாதை வசதி இல்லை. எனவே இந்த தூவல் நீர்வீழ்ச்சியை சுற்றுலா தலமாக்க வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் சுமார் 50 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து எட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில், இந்த தூவல் நீர்வீழ்ச்சியை நாங்கள், எட்டிப்பட்டி ஒகேனக்கலாகவே பார்க்கிறோம். .கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு எட்டிப்பட்டி தூவல் நீர்வீழ்ச்சியை சுற்றுலா தலம் ஆக்குவதற்காக அன்றைய கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர், அரூர் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு சென்றனர். அதன்பிறகு எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. எனவே தூவல் நீர்வீழ்ச்சியை சுற்றுலா தலமாக்கினால், இந்த பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதுடன், எட்டப்பட்டி பகுதியும் சுற்றுலா பயணிகளின் வருகையாக வளர்ச்சி பெறும் என்றனர்.

Next Story