சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 28 Oct 2021 9:00 PM GMT (Updated: 2021-10-29T02:30:10+05:30)

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

பெரம்பலூர்:

முற்றுகை
பெரம்பலூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலின் உபகோவில்களான பெரியசாமி மலைக்கோவில், செங்கமலையார் கோவிலில் மீண்டும் சாமி சிலைகள் உடைக்கப்பட்டதை கண்டித்தும், மேலும் பொன்னுச்சாமி கோவில், கொரப்புலியார் கோவிலில் சாமி சிலைகள் உடைக்கப்பட்டதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக சிறுவாச்சூர் ஊர் பொதுமக்கள் மாரியம்மன் கோவில் அருகே நேற்று காலையில் திரண்டனர். பின்னர் அவர்கள் கையில் கருப்பு கொடியேந்தி சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர்.
அப்போது அவர்கள் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலின் உபகோவில்களில் சாமி சிலைகளை உடைத்த மர்மநபர்களை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோஷத்தை எழுப்பியவாறு சென்றனர். பின்னர் அவர்கள் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலின் வளாகத்தில் உள்ள கோவிலின் அலுவலகத்தை முற்றுகையிட்டு, கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அலுவலகத்தில் உள்ளே இருந்த கோவில் செயல் அலுவலர் அருண்பாண்டியன் வெளியே வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட முயன்றார்.
சரமாரியாக கேள்வி எழுப்பினர்
மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சஞ்சீவ்குமார், பெரம்பலூர் தாசில்தார் கிருஷ்ணராஜ் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் கோவிலின் நுழைவு வாயில் முன் மண்டபத்தில் வைத்து பொதுமக்களிடம், கோவில் செயல் அலுவலர் அருண்பாண்டியன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள் ஏற்கனவே சிறுவாச்சூர் பெரியசாமி, செங்கமலையார் கோவில்களில் சாமி சிலைகள் உடைக்கப்பட்டன. ஆனால் அதற்கு இந்து சமய அறநிலையத்துறையும், கோவில் நிர்வாகமும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது அந்த கோவில்களில் மீண்டும் சாமி சிலைகள் உடைக்கப்பட்டுள்ளது.
இதற்கு இந்து சமய அறநிலையத்துறையும், கோவில் நிர்வாகமும் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள்? உடைக்கப்பட்ட சாமி சிலைகளை எத்தனை நாட்களுக்கு புனரமைப்பு செய்து கொடுக்கப்போகிறீர்கள் என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.
கலெக்டரிடம் கோரிக்கை மனு
மேலும் பணி செய்யாத மலை காவலாளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதல் மலை காவலாளியை நியமிக்க வேண்டும். பெரியசாமி மலைக்கோவிலுக்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும், மின் வசதி ஏற்படுத்தி கொடுக்கவும் நடவடிக்கை வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கோவில் செயல் அலுவலரிடம் முன் வைத்தனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக கோவில் செயல் அலுவலர் தெரிவித்தார். மேலும் பொதுமக்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுவை தாசில்தார் கிருஷ்ணராஜிடம் வழங்கினர்.
அப்போது அவர் இது தொடர்பாக கலெக்டரிடம் தெரிவித்து, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும், பொதுமக்கள் சார்பில் முக்கியஸ்தர்களுக்கும் இடையே கலெக்டர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்படும், என்றார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் ஊர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவை சந்தித்து கோரிக்கை மனுவினை வழங்கிவிட்டு சென்றனர்.

Next Story