காஞ்சீபுரத்தில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்
காஞ்சீபுரத்தில் வாகன நெரிசலை குறைக்க போக்குவரத்து மாற்றங்கள் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
கலந்தாய்வு கூட்டம்
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி தலைமையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர், காஞ்சீபுரம் எம்.எல்.ஏ., சிவி.எம்.பி. எழிலரசன் ஆகியோர் முன்னிலையில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட நகர போக்குவரத்து சீரமைப்பு கலந்தாய்வு கூட்டம் கடந்த 21-ந் தேதி நடைபெற்றது.
இக்கூட்டத்தில் போக்குவரத்து சீரமைப்புகள் தொடர்பான சிலவற்றை நேற்று (28-ந்தேதி) முதல் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
காமராஜர் சாலையிருந்து காந்திரோடு செல்லும் வாகனங்கள் இடது புறமாகவும், மேட்டுத்தெருவிலிருந்து வரும் வாகனங்கள் காமராஜர் சாலைக்கு நேராகவும், மேட்டுத் தெருவிலிருந்து காந்திரோடு வரும் வாகனங்கள் வலது புறமாகவும் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
வாகன நெரிசலை குறைக்க...
மடம் தெருவிலிருந்து வரும் வாகனங்கள் காந்திரோடு வழியாக செல்லும் போது மேட்டுத் தெருவிலிருந்து வரும் வாகனங்கள் மற்றும் காமராஜர் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் 12 முதல் 15 வினாடிகள் நிறுத்தப்படுகிறது.
அப்போது நடந்து செல்லக்கூடியவர்கள் காந்திரோட்டிலிருந்து எதிரே மேட்டுத் தெரு சந்திப்பிலிருந்து பச்சையப்பன் பள்ளி மற்றும் மடம் தெரு நோக்கி சாலையை கடந்து செல்ல அனுமதிக்கலாம்.
மடம் தெருவிலிருந்து வரும் வாகனங்கள் மேட்டுத்தெரு நோக்கி செல்ல அனுமதியில்லை. செங்கழுநீரோடை தெருவில் உள்ள பூக்கடை சத்திரம் மற்றும் மார்க்கெட் வாகன நெரிசலை குறைக்கும் பொருட்டு பி.டி.வி.எஸ். பள்ளியின் எதிர்புறம் உள்ள காலி இடத்தில் வாகனங்களை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று முதல் நடைமுறை
காமராஜர் சாலையில் பயணிகள் மற்றும் அவர்களை அழைத்து வருபவர்களின் வாகனங்களை காமராஜர் சாலை போக்குவரத்து காவல் பூத் அருகே நிறுத்தி கொள்ளலாம்.
காஞ்சீபுரம் ராஜாஜி மார்க்கெட் வரும் பொதுமக்கள், பிற வாகனங்கள் மீன் மார்க்கெட் எதிரே உள்ள வேன் நிறுத்தம் அருகே வாகனங்களை நிறுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் காஞ்சீபுரம் நகரில் இன்று முதல் நடைமுறைப்படுத்த உள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story