ஈரோட்டில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.10 கோடி மோசடி தொழில்அதிபரை கைதுசெய்யக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் சாலைமறியல்


ஈரோட்டில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.10 கோடி மோசடி தொழில்அதிபரை கைதுசெய்யக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 30 Oct 2021 2:32 AM IST (Updated: 30 Oct 2021 2:32 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.10 கோடி மோசடி செய்த தொழில் அதிபரை கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு
ஈரோட்டில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.10 கோடி மோசடி செய்த தொழில் அதிபரை கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏலச்சீட்டு
ஈரோடு சூளை சி.எஸ். நகரை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் ஈரோடு -பவானி ரோடு அசோகபுரம் பகுதியில் ஏலச் சீட்டு நிறுவனம் நடத்தி வந்தார். இவருடைய நிறுவனத்தில் ஏராளமானோர் சீட்டு கட்டி வந்தனர். இதற்கிடையில் சீட்டு போட்டவர்களுக்கு அவர் சரிவர பணம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
மேலும் கடந்த சில நாட்களாக நிறுவனமும் திறக்கப்படாததால் சீட்டு போட்டவர்கள் சந்தேகமடைந்து நேற்று முன்தினம் தொழில் அதிபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சாலை மறியல்
இந்தநிலையில் ஈரோடு பவானி மெயின் ரோட்டில் உள்ள அலுவலகத்தில் இருந்த பொருட்களை ஊழியர்கள் நேற்று ஒரு வாகனங்களில் ஏற்றிக் கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சீட்டு போட்டவர்கள் அலுவலகம் முன்பு திரண்டனர். அவர்கள் நாங்கள் செலுத்திய சீட்டு பணத்தை திருப்பித்தர வேண்டும் என்று ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து அவர்கள் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த தொழில்அதிபரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு- பவானி ரோட்டில் அமர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வீரப்பன்சத்திரம் மற்றும் கருங்கல்பாளையம் போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போக்குவரத்து பாதிப்பு
அப்போது அவர்கள் கூறும்போது, ‘நாங்கள் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரை ஏலச்சீட்டு போட்டு கட்டி வந்தோம். 250-க்கும் மேற்பட்டவர்கள் ஏலச்சீட்டில் ரூ.10 கோடிக்கு மேல் செலுத்தி உள்ளோம். தற்போது ஏலச்சீட்டு நடத்தி வந்த தொழில் அதிபருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும், அதனால் அவர் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளதாகவும் ஊழியர்கள் தெரிவித்து வருகிறார்கள். எனவே நாங்கள் செலுத்திய சீட்டு பணத்தை தொழில் அதிபர் திருப்பித்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
அதற்கு போலீசார், ‘இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே நீங்கள் அனைவரும் இங்கிருந்து கலைந்து செல்லுங்கள்’ என்றனர். அதை ஏற்றுக்கொண்ட அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக ஈரோடு -பவானி ரோட்டில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story