எரிவாயு, பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தள்ளுவண்டி- மாட்டுவண்டியில் கியாஸ் சிலிண்டரை வைத்து நூதன போராட்டம்; இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் திரளாக பங்கேற்பு


எரிவாயு, பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தள்ளுவண்டி- மாட்டுவண்டியில் கியாஸ் சிலிண்டரை வைத்து நூதன போராட்டம்; இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் திரளாக பங்கேற்பு
x
தினத்தந்தி 31 Oct 2021 2:32 AM IST (Updated: 31 Oct 2021 2:32 AM IST)
t-max-icont-min-icon

எரிவாயு மற்றும் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தள்ளுவண்டி மற்றும் மாட்டுவண்டியில் கியாஸ் சிலிண்டரை வைத்து ஊர்வலமாக வந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு
எரிவாயு மற்றும் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தள்ளுவண்டி மற்றும்  மாட்டுவண்டியில் கியாஸ் சிலிண்டரை வைத்து ஊர்வலமாக வந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். 
சத்தியமங்கலம்
கியாஸ் சிலிண்டர் (எரிவாயு) மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பொதுத்துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். 
சத்தியமங்கலத்தில் எஸ்.ஆர்.டி. சந்திப்பு பகுதியில் இருந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சைக்கிள் ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தை கட்சியின் சத்தி நகர செயலாளர் ஸ்டாலின் சிவகுமார் தலைமை தாங்கி  தொடங்கி வைத்தார். வடக்கு ஒன்றிய செயலாளர் சுரேந்திரன், தெற்கு ஒன்றிய செயலாளர் நடராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
ஊர்வலத்தின்போது ஒரு தள்ளுவண்டியில் கியாஸ் சிலிண்டரை தூக்கி வைத்து அதற்கு கட்சியினர் மாலை அணிவித்தனர். பின்னர் கியாஸ் சிலிண்டர் இருந்த தள்ளுவண்டியை தள்ளியபடி கட்சியினர் ஊர்வலமாக சென்றனர்.  இந்த ஊர்வலம் சத்தியமங்கலத்தில் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோட்டு வீராம்பாளையத்தில் முடிவடைந்தது. இதில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் முருகன் உள்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டியில் பவானிசாகர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி மாட்டு வண்டியில் மோட்டார்சைக்கிள் மற்றும் கியாஸ் சிலிண்டரை வைத்து சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது. 
ஊர்வலத்துக்கு பவானிசாகர் ஒன்றிய தலைவர் மகேகந்திரன் தலைமை தாங்கினார். ஊர்வலம் புஞ்சைபுளியம்பட்டி எஸ்.ஆர்.டி. நகர் பகுதியில் இருந்து தொடங்கி முக்கிய ரோடுகள் வழியாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தை சென்றடைந்தது. ஊர்வலத்தில் சென்றவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். 
சிவகிரி
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சிவகிரி புதிய பஸ் நிலையம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் ரணதிவேல் தலைமை தாங்கினார். நகர செயலாளர் வரதராஜன், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பிரதிநிதி சிவசண்முக பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையொட்டி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டிக்கிறோம் என்ற பதாகைகளை கையில் ஏந்தியபடி கட்சியினர் ஊர்வலமாக சென்றனர். 
இதில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட தலைமை நிலைய செயலாளர் சீனிவாசன், தி.மு.க. மாவட்ட இலக்கிய அணி செயலாளர் இளஞ்செழியன், ம.தி.மு.க. சிவகிரி பேரூர் செயலாளர் நல்லசிவம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் சசி உள்பட பலர் கலந்து கொண்டனர். 
பெருந்துறை
பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும், பெருந்துறையில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சைக்கிள் ஊர்வலம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடைபெற்றது. 
பெருந்துறை பஸ் நிலையம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு தலைமை தாங்கி பேசினார். இதில் மாவட்ட விவசாய அணி செயலாளர் துளசிமணி, பெருந்துறை ஒன்றிய செயலாளர் தெய்வசிகாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து சைக்கிள் ஊர்வலம் நடந்தது. இந்த சைக்கிள் ஊர்வலம் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு தினசரி மார்க்கெட் அருகே முடிவடைந்தது.
சென்னிமலை
சென்னிமலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து சைக்கிள் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னிமலை பஸ் நிலையம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மா.நாகப்பன் தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.பொன்னுசாமி, ஏ.ஐ.டி.யு.சி.யை சேர்ந்த மு.பாரதி, ஆர்.ரவி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தை சேர்ந்த செ.சதீஷ் ஆகியோர் பேசினார்கள். முடிவில் மகேந்திரன் நன்றி கூறினார்.

Next Story