சேலம் மாநகராட்சியில் 2 மாதத்துக்குள் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் முடிக்கப்படும்-அமைச்சர் கே.என்.நேரு பேட்டி


சேலம் மாநகராட்சியில் 2 மாதத்துக்குள் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் முடிக்கப்படும்-அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
x
தினத்தந்தி 31 Oct 2021 2:46 AM IST (Updated: 31 Oct 2021 2:46 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாநகராட்சியில் 2 மாதத்துக்குள் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் முடிக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

சேலம்:
சேலம் மாநகராட்சியில் 2 மாதத்துக்குள் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் முடிக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள்
சேலத்தில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சேலம் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் 80 பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 46 பணிகள் ரூ.273 கோடியே 69 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 34 பணிகள் ரூ.672 கோடியே 86 லட்சம் மதிப்பில் நடைபெற்று வருகின்றன. இன்னும் 2 மாதத்துக்குள் இந்த பணிகள் முடிக்கப்பட்டு முழுமையாக மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
வளர்ச்சி பணிகள்
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு பொறுப்பு அமைச்சரை முதல்-அமைச்சர் நியமித்துள்ளார். அதில் சேலத்தை நான் கவனித்து வருகிறேன். சேலம் மாவட்டம் ஏற்கனவே அ.தி.மு.க. ஆட்சியில் முதல்-அமைச்சர் இருந்த மாவட்டம் என்பதால், அவர் செய்ததைவிட சிறப்பாக செய்வதற்காக தி.மு.க. ஆட்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த புதிய திட்டங்களில் ஒன்றாகும்.
பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்கு ஒப்பந்ததாரர்கள் கிடைப்பது கடினமாக உள்ளது. பாதாள சாக்கடை பணி நடைபெறும் இடங்களில் பாறையாக இருந்தால் பணி முடிவடைவதற்கு காலதாமதம் ஏற்படுகிறது. மேலும் ஒப்பந்ததாரர்கள் கூடுதல் பணம் கேட்கின்றனர். இனிமேல் ஒவ்வொரு இடத்திலும் மண் பரிசோதனை செய்யப்பட்டு, ஒப்பந்ததாரர்களுக்கு நஷ்டம் ஏற்படாத வகையிலும், பணிகளையும் விரைவில் முடிக்கவும் புதிய நடைமுறை பின்பற்றப்படும்.
பயோ மைனிங் திட்டம்
கழிவு நீரை சுத்தப்படுத்தி மறுசுழற்சி செய்து அந்த தண்ணீரை விவசாயத்துக்கு பயன்படுத்தும் திட்டமும் உள்ளது. சேலம் மாவட்டத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 129 எம்.எல்.டி. தண்ணீர் கொடுக்கிறார்கள். அந்த தண்ணீர் வருகிற போது கழிவுநீராக 70 அல்லது 80 எம்.எல்.எடி. வரும். அதை சுத்தப்படுத்த திட்டம் ஆரம்பித்துள்ளோம். இதை ஒவ்வொரு இடத்துக்கும் கொண்டு வருகிறோம்.
பேரூராட்சி பகுதியாக இருந்தால் டேங்கர் மூலம் உறிஞ்சி ஒரு இடத்தில் கொட்டி காய வைத்து அதை உரமாக்கும் பணியையும் செய்து கொண்டிருக்கிறோம். பயோ மைனிங் திட்டம் சென்னையில் 350 ஏக்கர் நிலத்திலும், திருச்சியிலும் 26 ஏக்கர் நிலத்திலும் அமைய உள்ளது. சேலத்திலும் 18.5 ஏக்கரில் அமைய உள்ளது. 
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வுக்கூட்டம்
முன்னதாக சேலம் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அனைத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு அமைச்சர் கே.என். நேரு தலைமை தாங்கினார். நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, பேரூராட்சிகளின் ஆணையர் செல்வராஜ், மாவட்ட கலெக்டர் கார்மேகம், எம்.பி.க்கள் எஸ்.ஆர்.பார்த்திபன் (சேலம்), ஏ.கே.பி.சின்ராஜ் (நாமக்கல்), எம்.எல்.ஏ.க்கள் வக்கீல் ராஜேந்திரன், ரா.அருள், சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உள்ளிட்ட துறைகள் மூலம் 67 பயனாளிகளுக்கு ரூ.27 லட்சத்து 39 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.என். நேரு வழங்கினார்.
2 ரோபோக்கள்
மேலும் சேலம் மாநகராட்சிக்குட்பட்ட சாக்கடை கழிவுநீர் சுத்தம் செய்யும் 2 ரோபோக்களை அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஷேக் அப்துல் ரஹ்மான், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ், மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அதைதொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு சேலம் கோட்டை, சின்னசாமி நகர் உள்விளையாட்டு அரங்கம், கோட்டை வணிக வளாகம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Next Story