நம்பியூர் அருகே கோழிப்பண்ணையில் போட்டிருந்த மின்வேலியில் சிக்கி கணவன்-மனைவி சாவு
நம்பியூர் அருகே கோழிப்பண்ணையை சுற்றி போடப்பட்ட மின்வேலியில் சிக்கி கணவனும், மனைவியும் பரிதாபமாக இறந்தனர்.
நம்பியூர்
நம்பியூர் அருகே கோழிப்பண்ணையை சுற்றி போடப்பட்ட மின்வேலியில் சிக்கி கணவனும், மனைவியும் பரிதாபமாக இறந்தனர்.
கணவன்-மனைவி
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள கெட்டிச்செவியூர் கும்மிபனை பகுதியை சேர்ந்தவர் ஆண்டியப்பன் (வயது 65). விவசாயி. அவருடைய மனைவி முனியம்மாள் (60). இவர்களுடைய மகன் வெங்கடாசலம். இவருடைய மகள் சவுமியா (16).
ஆண்டியப்பனும், முனியம்மாளும் சேர்ந்து வீட்டின் அருகே பண்ணை அமைத்து சுமார் 40-க்கும் மேற்பட்ட கோழிகளை வளர்த்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பண்ணைக்குள் புகுந்த மர்ம நபர்கள் கோழியை திருடி சென்றுவிட்டனர்.
மின்சாரம் தாக்கியது
இதனால் கோழி திருடு போவதை தடுக்க ஆண்டியப்பனும், முனியம்மாளும் பண்ணையை சுற்றி மின்வேலி போட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முனியம்மாள் தீவனம் வைப்பதற்காக கோழி பண்ணைக்கு சென்றுள்ளார்.
அப்போது அவர் எதிர்பாராதவிதமாக மின் வேலி கம்பியை தொட்டபோது அவரை மின்சாரம் தாக்கியது. இதனால் அவர் அலறி துடித்தார். சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்த ஆண்டியப்பன் அங்கு ஓடிவந்து பார்த்தார். அதிர்ச்சி அடைந்த அவர் முனியம்மாளை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியது. இதனால் 2 பேரும் தரையில் துடித்தபடி புரண்டனர்.
சாவு
ஆண்டியப்பன், முனியம்மாளின் அலறல் சத்தம் கேட்டு பேத்தி சவுமியா அங்கு வந்து, அவர்கள் 2 பேரையும் தொட்டுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கியதால் அவர் உடனே சட்டென்று கையை எடுத்துவிட்டார். உடனே வெங்கடாசலம் வந்து மின்இணைப்பை துண்டித்தார்.
அதன்பின்னர் ஆண்டியப்பனையும், முனியம்மாளையும் பார்த்தபோது அவர்கள் இறந்தது தெரியவந்தது. உடனே இதுபற்றி நம்பியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சோகம்
இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மின்சாரம் தாக்கி கணவன்-மனைவி இறந்த சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
2 பேரின் உடல்களையும் பார்த்து அவர்களின் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.
Related Tags :
Next Story