ஈரோடு மாவட்டத்தில் இன்று 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிக்கூடங்கள் திறப்பு


ஈரோடு மாவட்டத்தில் இன்று 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிக்கூடங்கள் திறப்பு
x
தினத்தந்தி 1 Nov 2021 2:44 AM IST (Updated: 1 Nov 2021 2:44 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகிறது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகிறது.
பள்ளிக்கூடம் திறப்பு
தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிக்கூடம், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. எனினும் மாணவ-மாணவிகளின் கல்வித்திறன் பாதிக்காத வகையில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்தன. கொரோனா தாக்கம் குறைய தொடங்கியதை அடுத்து படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் 1-ந்தேதி முதல் 9, 10, பிளஸ்-1, பிளஸ்- 2 படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) முதல் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ -மாணவிகளுக்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது. 
ஈரோடு மாவட்டத்தில் 1,287 அரசு தொடக்க நிலை, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிக்கூடங்களில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 1 லட்சத்து 6 ஆயிரத்து 520 மாணவ -மாணவிகள் படித்து வருகின்றனர்.
தூய்மைப்பணி
பள்ளிக்கூடங்கள் திறப்பையொட்டி, தூய்மைப்படுத்தும் பணிகள் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடந்தது. கிருமிநாசினி தெளிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளிக்கூடங்களில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து தொடக்கக்கல்வி இயக்குனர் அனைத்துப்பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மேலும் மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த காரணம் கொண்டும் மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடத்துக்கு வர கட்டாயப்படுத்தக்கூடாது. பெற்றோர்கள் விருப்பத்தின் பேரில் அவர்கள் பள்ளிக்கூடத்துக்கு வரலாம்.
புத்தாக்க பயிற்சி
மாணவ-மாணவிகள் கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும். அவர்களின் உடல் வெப்ப பரிசோதனை தெரிந்து கொள்ளும் வகையில் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்படும். மாணவ -மாணவிகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், பணியாளர்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. பள்ளிக்கூடங்கள் இன்று திறந்தாலும் சில நாட்களுக்கு மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Next Story