2 நாட்களாக நடந்த முகாமில் 42 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி


2 நாட்களாக நடந்த முகாமில் 42 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 1 Nov 2021 2:45 AM IST (Updated: 1 Nov 2021 2:45 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் 2 நாட்களாக நடந்த முகாமில் 42 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 2 நாட்களாக நடந்த முகாமில் 42 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
1,089 மையங்கள்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் 6 கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதில் லட்சக்கணக்கான மக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதைத்தொடர்ந்து 7-வது கட்ட மாபெரும் தடுப்பூசி முகாம் 2 நாட்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி கடந்த மாதம் 29-ந்தேதி ஈரோடு மாவட்டத்தில் 531 மையங்களிலும், நேற்று முன்தினம் 558 மையங்களிலும் என மொத்தம் 1,089 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடந்தது. வழக்கம்போல் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
கொரோனா தடுப்பூசி
ஈரோடு மாநகர் பகுதியில் 60 வார்டுகளிலும் தலா ஒரு தடுப்பூசி மையம் என 60 தடுப்பூசி முகாம் மற்றும் 4 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம், மேலும் 40 நடமாடும் வாகனம் மூலம் தடுப்பூசி முகாம் நடந்தது.
 இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்களுடைய வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக நடந்த மாபெரும் தடுப்பூசி முகாமில் 42 ஆயிரத்து       21 பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது. இதில் 14 ஆயிரத்து 839 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 27 ஆயிரத்து 182 பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

Next Story