சென்னையில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள தன்னார்வலர்களுக்கு மாநகராட்சி அழைப்பு
‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் சென்னையில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள தன்னார்வலர்களுக்கு மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நமக்கு நாமே திட்டம்
தமிழக அரசின் சார்பில் நகர்ப்புற கட்டமைப்புகளுக்கான திட்டங்களில் பொதுமக்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் ‘‘நமக்கு நாமே’’ திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நமக்கு நாமே திட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சுமார் ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி பொதுமக்கள், சமூக நல அமைப்புகள், நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள் உள்ளிட்டோர் ஒரு பங்கு நிதி அளித்தால், அரசின் சார்பில் கூடுதலாக இரு பங்கு நிதி வழங்கப்பட்டு, மக்கள் பரிந்துரைக்கும் சிறப்பு திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.
பொதுமக்கள் அல்லது நிறுவனங்களின் சார்பில் திட்டத்துக்கான மதிப்பீட்டில் குறைந்தது மூன்றில் ஒரு பங்கு நிதி செலுத்தப்படவேண்டும். நீர்நிலைகள் புனரமைப்பு செய்தல் தொடர்பான பணிகளில் தூர்வாருதல் மற்றும் கரைகளை பலப்படுத்தும் பணிகளுக்கு திட்ட மதிப்பீட்டில் குறைந்தபட்சம் 50 சதவீத பங்களிப்பை பொதுமக்கள் அல்லது நிறுவனங்கள் வழங்க வேண்டும்.
வரம்பு ஏதும் இல்லை
இந்த திட்டத்தில் பொதுமக்களின் பங்களிப்புக்கு அதிகபட்ச வரம்பு ஏதும் இல்லை. நிறுவனங்களால் வழங்கப்படும் சமூக பங்களிப்பு நிதியையும் (சி.எஸ்.ஆர்.) நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்த பயன்படுத்தி கொள்ளலாம். 50 சதவீதத்துக்கு மேல் பங்களிப்பை அளிக்கும் நிறுவனங்கள் அல்லது நபர்கள் அந்த பணிகளை பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்களின் மேற்பார்வையில் அவர்களே மேற்கொள்ளலாம்.
இந்த திட்டத்தின்படி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர்நிலைகளை புனரமைத்தல், பூங்கா, விளையாட்டுத்திடல், போக்குவரத்து தீவுத்திட்டுக்கள், செயற்கை நீரூற்றுகள் மற்றும் தெருவிளக்குகள் அமைத்தல், மேம்படுத்துதல், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் உயர்கோபுர சூரிய மின்விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தல், மரக்கன்றுகளை நடுதல், பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் புதிய கட்டிடங்கள், பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை அமைத்தல், சுற்றுச்சுவர் அமைத்தல் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், நவீன நூலங்கள் மற்றும் அறிவுசார் மையங்கள் அமைத்தல், புதிய பாலங்கள், குறுக்கு பாலம், மழைநீர் வடிகால் அமைத்தல், சாலைகளை மேம்படுத்துதல், பொதுமக்கள் பயன்பாட்டுக்கான கட்டிடங்களை அமைத்தல், அங்கன்வாடி மையங்கள், பொதுக்கழிப்பறைகள் மற்றும் மார்க்கெட் பகுதிகளை புனரமைத்தல் மற்றும் மேம்படுத்துதல், புதிய தகனமேடைகளை அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள பொதுமக்கள் தங்கள் பங்களிப்பை அளிக்கலாம்.
பெயர் பலகையில் காட்சி
நமக்கு நாமே திட்டத்தில் பணிகளை மேற்கொள்ள பங்களிப்பை அளிக்கும் நிறுவனங்கள் அல்லது நபர்களின் விவரம் திட்டப்பணி முடிவுற்றவுடன் அந்த இடத்தில் பெயர் பலகையில் காட்சிபடுத்தப்படும்.
‘‘நமக்கு நாமே’’ திட்டத்தில் பங்கேற்று விருப்பமுள்ள பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள், தாங்கள் செயல்படுத்த விரும்பும் மக்கள் நலத்திட்டத்தை தேர்வு செய்து, சென்னை மாநகராட்சி கமிஷனர்கள், துணை கமிஷனர்கள், வட்டார துணை கமிஷனர்கள், தலைமை என்ஜினீயர்கள் மற்றும் மண்டல அலுவலர்களை அணுகி தெரிவிக்கலாம். மேலும், இது தொடர்பான விவரங்களுக்கு 9444100198 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story