காஞ்சிக்கோவில் அருகே துணிகர சம்பவம்: ஆடு மேய்த்த மூதாட்டியின் காதை அறுத்து கம்மல் பறிப்பு- மோட்டார்சைக்கிளில் தப்பிய வாலிபர்களுக்கு வலைவீச்சு
காஞ்சிக்கோவில் அருகே ஆடு மேய்த்த மூதாட்டியின் காதை அறுத்து கம்மலை பறித்துக்ெகாண்டு தப்பிய வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பெருந்துறை
காஞ்சிக்கோவில் அருகே ஆடு மேய்த்த மூதாட்டியின் காதை அறுத்து கம்மலை பறித்துக்ெகாண்டு தப்பிய வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தண்ணீர் கேட்ட வாலிபர்கள்
பெருந்துறையில் இருந்து காஞ்சிக்கோவில் செல்லும் வழியில் சூரியம்பாளையம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் சின்னச்சாமி (வயது 70). இவருடைய மனைவி செல்லம்மாள் (65). விவசாயியான செல்லம்மாள் ஆடுகளும் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் காஞ்சிக்கோவில் செல்லும் ரோட்டோரம் ஆடுகள் மேய்த்துக்கொண்டு இருந்தார்.
அப்போது, அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் அங்கு வந்தார்கள். பின்னர் செல்லம்மாளிடம் சென்று அவர்கள் குடிப்பதற்கு தண்ணீர் தருவீர்களா? என்று கேட்டுள்ளார்கள்.
அதைக்கேட்ட செல்லம்மாள் தான் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவர்களிடம் கொடுத்துள்ளார்.
காதை அறுத்தார்கள்...
அப்போது தண்ணீர் கேட்ட வாலிபர்கள் இருவரும் திடீரென செல்லம்மாள் மீது பாய்ந்து, அவரை நகர முடியாதபடி பிடித்துக்கொண்டார்கள். பின்னர் அவருடைய ஒரு காதில் இருந்த தங்க கம்மலை கழட்டியுள்ளனர். உடனே செல்லம்மாள், "அய்யோ திருடன்"என்று, சத்தம் போட்டுள்ளார்.
இதையடுத்து உஷாரான கொள்ளையர்கள், செல்லம்மாளின் மற்றொரு காதை தங்களிடமிருந்த கத்தியால் அறுத்து 2-வது கம்மலையும் பறித்துக்கொண்டு மோட்டார்சைக்கிளில் தப்பிச்சென்றுவிட்டார்கள்.
பெண்கள் அச்சம்
இந்தநிலையில் செல்லம்மாளின் அலறலை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்தார்கள். பின்னர் ரத்த வெள்ளத்தில் துடித்த செல்லம்மாளை மீட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்கள். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுகுறித்த புகார் பேரில் காஞ்சிக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லம்மாளின் காதை அறுத்து கம்மலை கொள்ளையடித்த வாலிபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஆடுமேய்த்துக்கொண்டு இருந்த மூதாட்டிக்கு நேர்ந்த இந்த சம்பவம் அந்த பகுதி பெண்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story