விபத்தில் காலை இழந்தவருக்கு நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
விபத்தில் காலை இழந்தவருக்கு நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
பெருந்துறை
விபத்தில் காலை இழந்தவருக்கு நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
கால் இழப்பு
சேலம் மாவட்டம் மேட்டூர் சவுரியார் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 26). கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ந் தேதி பெருந்துறை கோவை மெயின் ரோட்டில் நால் ரோடு அருகே இவர் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் ஒன்று மோதியது. இதில் ஜெகநாதன் வலது காலை இழந்தார்.
இதையடுத்து கோவை மண்டல அரசு போக்குவரத்து கழகம் மீது நஷ்ட ஈடு கேட்டு ஜெகநாதன் பெருந்துறை சார்பு நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் அரசு போக்குவரத்து கழகம் பாதிக்கப்பட்ட ஜெகநாதனுக்கு ரூ.18 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று 2016-ம் ஆண்டு தீர்ப்பளித்தார்.
உத்தரவு
இதை எதிர்த்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த முறையீட்டை விசாரித்த ஐகோர்ட்டு, பெருந்துறை சார்பு நீதி மன்றம் விதித்த இழப்பீட்டுத் தொகையான ரூ.18 லட்சத்தை, ரூ.28 லட்சமாக அதிகரித்து. ஜெகநாதனுக்கு ரூ.28 லட்சத்தை இழப்பீடாக தரவேண்டும் என்று 2018-ல் தீர்ப்பளித்தது. இதையடுத்து, முதல் தவணையாக ரூ.10 லட்சத்தை 2020-ம் ஆண்டு அரசு போக்குவரத்துக் கழகம் ஜெகநாதனுக்கு வழங்கியது.
மீதமுள்ள நஷ்ட ஈட்டுத்தொகை மற்றும் 2016-ல் இருந்து நஷ்ட ஈட்டுத்தொகைக்கான வட்டி ஆகிய அனைத்தும் சேர்த்து 21 லட்சத்து 57 ஆயிரத்து 599 ரூபாயை ஜெகநாதனுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்று பெருந்துறை சார்பு நீதிமன்றம், கடந்த 2020-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை.
பஸ் ஜப்தி
இதையடுத்து தனக்குரிய இழப்பீட்டு பணத்தை அரசு போக்குவரத்து கழகத்திடமிருந்து பெற்றுத்தர வேண்டும் என்று ஜெகநாதன் மீண்டும் பெருந்துறை சார்பு நீதி மன்றத்தில் முறையீடு செய்தார். அவரது முறையீட்டை விசாரித்த சார்பு நீதிமன்ற நீதிபதி தமிழ்செல்வி, இழப்பீடு வழங்கத் தவறிய அரசு போக்குவரத்துக்கு சொந்தமான பஸ் ஒன்றை உடனடியாக ஜப்தி செய்யுமாறு நேற்று உத்தரவிட்டார்.
அந்த உத்தரவின் பேரில் நேற்று பெருந்துறை பஸ் நிலையத்திற்கு வந்த கோவை-நாமக்கல் பயணிகள் அரசு பஸ்சை கோர்ட்டு அமீனா ரவிச்சந்திரன் ஐப்தி செய்தார். பின்னர் அதை பெருந்துறை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட ஜெகநாதனுக்காக பெருந்துறையைச் சேர்ந்த வக்கீல் அய்யப்பன் ஆஜர் ஆகியிருந்தார்.
Related Tags :
Next Story