‘விடுதலை போரில் தமிழகம்' புகைப்பட கண்காட்சி; மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சுதந்திர போராட்ட தியாகிகளின் வீர தீர செயல்களை விளக்கும் வகையிலான 'விடுதலை போரில் தமிழகம்' என்ற புகைப்பட கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
புகைப்பட கண்காட்சி
சென்னை கோயம்பேடு புறநகர் பஸ் நிலைய வளாகத்தில், 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் இந்திய விடுதலை போரில் இன்னுயிர் ஈந்த, பல்வேறு துயரங்களுக்கு ஆட்பட்ட தியாகிகளின் பெருமிதங்களை நினைவுகூர்ந்து போற்றும் வகையில் ‘விடுதலை போரில் தமிழகம்' என்ற புகைப்பட கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சி அரங்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். பின்னர் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள சுதந்திர போராட்ட தியாகிகளின் வீர தீர செயல்கள் குறித்த புகைப்படங்கள் மற்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ள வரலாற்று ஆவணங்களை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
சிலைகள்-அரிய புகைப்படங்கள்
கண்காட்சி அரங்கில் காந்தியடிகள், ஜவகர்லால் நேரு, பாரதியார், வ.உ.சி., வேலுநாச்சியார் ஆகியோரின் சிலைகள் இடம் பெற்றுள்ளன. இந்திய விடுதலை போராட்டங்களின் பல்வேறு வரலாற்று தொகுப்புகள், உப்பு சத்தியாகிரக போராட்டம், சுதந்திர போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பு போன்றவைகள் குறித்த புகைப்படங்கள், சுதந்திர போராட்டத்தில் பங்குபெற்றும் மக்களால் இதுவரை அறியப்படாத தியாகிகளின் புகைப்படங்கள் என பல்வேறு அரியவகை புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
வரலாற்று ஆவணங்கள்
விடுதலை போராட்டம் பற்றிய பழைய மண் பொம்மைகள், ஒலியோகிராப் படங்கள், மரத்திலான ராட்டை, வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிட்டது குறித்து கிழக்கிந்திய கம்பெனிக்கு பானர்மேன் கொடுத்த அறிக்கை, மருதுபாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட விசாரணை ஆவணங்கள்,
ஆஷ்துரை கொலை வழக்கு பற்றிய ஆவணம், நீல் சிலை உடைப்பு குறித்த ஆவணம், வ.உ.சி. வழக்கு (திருநெல்வேலி சதி வழக்கு) ஆவணங்கள், செஞ்சிக்கோட்டை மற்றும் இதர கோட்டையின் நிலவரைகள், வேலூர் சிப்பாய் கலகம் பற்றிய வரலாற்று ஆவணங்கள் குறித்த புகைப்படங்களும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
புகைப்பட கண்காட்சி பஸ்
வ.உ.சி. 150-வது பிறந்த நாள் அரசு சார்பில் எழுச்சியுடன் கொண்டாடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வ.உ.சி. வாழ்க்கை வரலாற்றின் அரிய நிகழ்வுகளை வெளிக்கொணரும் வகையிலும், அதனை பள்ளி மாணவ-மாணவிகள் பார்வையிட்டு பயன்பெறும் வகையிலும் போக்குவரத்து துறை சார்பில் நகரும் புகைப்பட கண்காட்சி பஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
Related Tags :
Next Story