தீபாவளி பண்டிகையையொட்டி ஈரோடு மாநகரில் போக்குவரத்து ஸ்தம்பித்தது- கடைவீதிகளில் மக்கள் குவிந்தனர்


தீபாவளி பண்டிகையையொட்டி ஈரோடு மாநகரில் போக்குவரத்து ஸ்தம்பித்தது- கடைவீதிகளில் மக்கள் குவிந்தனர்
x
தினத்தந்தி 3 Nov 2021 2:44 AM IST (Updated: 3 Nov 2021 2:44 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையையொட்டி ஈரோடு மாநகரில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. கடைவீதிகளில் பொதுமக்கள் குவிந்தனர்.

ஈரோடு
தீபாவளி பண்டிகையையொட்டி ஈரோடு மாநகரில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. கடைவீதிகளில் பொதுமக்கள் குவிந்தனர். 
போக்குவரத்து ஸ்தம்பித்தது
தீபாவளி பண்டிகை நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஜவுளி வாங்க பொதுமக்கள் கடை வீதிகளில் குவிந்தனர். இதேபோல் டி.வி., செல்போன், பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களையும் வாங்குவதற்காக பொதுமக்கள் கடைகளுக்கு சென்றார்கள். இதனால் அந்த கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததை காணமுடிந்தது.
ஈரோடு மணிக்கூண்டு, ஆர்.கே.வி.ரோடு பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் மற்ற சாலை வழியாக வாகனங்கள் சென்றன. மாநகரில் எங்கு பார்த்தாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக மேட்டூர்ரோடு முழுவதும் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்தது. அங்கு மிக நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மேலும், சத்திரோடு, பெருந்துறைரோடு, காந்திஜிரோடு, கே.என்.கே.ரோடு, காவிரிரோடு என மாநகரில் அனைத்து முக்கிய சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
விழாக்கோலம்
போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள். அவர்கள் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டார்கள். பல இடங்களில் போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ்கள்    சிக்கி கொண்டன. அப்போது போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்தார்கள்.
கடை வீதிகளில் ஜவுளிகளை வாங்க பொதுமக்கள் ஏராளமானவர்கள் வந்திருந்தனர். இதனால் மணிக்கூண்டு பகுதி முழுவதும் மக்கள் கூட்டமாக காணப்பட்டது. சாலையோரமாக பல்வேறு ஜவுளி ரகங்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டன. அதையும் பொதுமக்கள் பலர் விரும்பி வாங்கி சென்றார்கள். கடைவீதியில் குவிந்த மக்கள் கூட்டத்தின் காரணமாக ஈரோடு மாநகரமே விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது. இதேபோல் வெளியூர்களுக்கு செல்வதற்கு ஏராளமானவர்கள் ஈரோடு பஸ் நிலையத்தில் குவிந்தனர். அவர்கள் பஸ்களில் முந்தியடித்து கொண்டு ஏறி இருக்கைகளை பிடித்தார்கள். இதனால் ஈரோடு பஸ் நிலையமும் பரபரப்பாக காணப்பட்டது.

Next Story