தீபாவளி பண்டிகையையொட்டி ஈரோட்டில் இருந்து வெளியூர்களுக்கு 200 சிறப்பு பஸ்கள்


தீபாவளி பண்டிகையையொட்டி ஈரோட்டில் இருந்து வெளியூர்களுக்கு 200 சிறப்பு பஸ்கள்
x
தினத்தந்தி 3 Nov 2021 2:45 AM IST (Updated: 3 Nov 2021 2:45 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையையொட்டி ஈரோட்டில் இருந்து வெளியூர்களுக்கு 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

ஈரோடு
தீபாவளி பண்டிகையையொட்டி ஈரோட்டில் இருந்து வெளியூர்களுக்கு 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
சிறப்பு பஸ்கள்
தீபாவளி பண்டிகை நாளை (வியாழக்கிழமை) சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் தங்கியிருந்து பணியாற்றுபவர்கள், ஈரோட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவ-மாணவிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ரெயில் நிலையம், பஸ் நிலையங்களில் குவிந்த வண்ணம் உள்ளனர். ரெயில்களில் முன்பதிவு சீட்டு கிடைக்காதவர்கள் பஸ்சில் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் கடந்த 2 நாட்களாக ஈரோட்டில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக மதுரை, திருநெல்வேலி, திருச்செந்தூர், நாகர்கோவில், சிவகாசி, ராமேசுவரம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் நிரம்பி காணப்படுகிறது.
பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் கூடுதலாக 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
பயணிகள்
இதுகுறித்து போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியதாவது:-
தீபாவளி பண்டிகையையொட்டி பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஈரோடு, சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், பெருந்துறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கோவை, சென்னை, பெங்களூரு, விழுப்புரம், ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி உள்பட பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
வருகிற 5-ந் தேதி மதியம் வரை இந்த பஸ்கள் இயக்கப்படும். அதன்பிறகு 6-ந் தேதியும், 7-ந் தேதியும் பற்ற மாவட்டங்களில் இருந்து ஈரோட்டுக்கு பயணிகள் வரும் வகையில் அங்கிருந்து ஈரோடு மாவட்டத்துக்கு கூடுதல் பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டால், மாவட்டத்துக்குள் இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கையை குறைத்துவிட்டு, மற்ற மாவட்டங்களுக்கு இயக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story