புகார் பெட்டி
புகார் பெட்டி
குடிநீர் தட்டுப்பாடு
ஈரோடு மாநகராட்சி எஸ்.எஸ்.பி. நகர் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. ஊராட்சிக்கோட்டை தண்ணீர் வரும் என்று அதிகாரிகள் கூறி வருகிறார்கள். ஆனால், ஏற்கனவே வந்த குடிதண்ணீர் வினியோகமும் இல்லாததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். வெளி ஊர்களில் இருந்து உறவினர்கள், நண்பர்கள் வந்து வீடுகளில் தங்கினால் தண்ணீர் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. எனவே எஸ்.எஸ்.பி. நகர் பகுதி வீடுகளுக்கு 2 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வினியோகம் செய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்குமரன், எஸ்.எஸ்.பி.நகர்.
குழியை மூடவில்லை
கோபி எஸ்.டி.என். காலனியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்றது. குழாயை பதித்த பின்னர் குழியை முறையாக மூடாமல் விட்டுவிட்டார்கள். மழைநீர் அதில் தேங்கி குழாய்கள் பழுதாகிவிட்டன. பழுதான சில இடங்களில் மழைநீர் குடிநீருடன் கலந்து விடுவதாகவும் புகார் எழுந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூடப்படாமல் உள்ள குழியை உடனே மூடுவதற்கு அதிகாரிகள் ஆவன செய்யவேண்டும்.
விநாயகன், கோபி.
கம்பிகள் தெரியும் மின்கம்பம்
கொடுமுடி அருகே உள்ள கொளத்துப்பாளையம்புதூரில் சின்னப்பநாடார் தெருவில் நீண்ட நாட்களாக மிகவும் ஆபத்தான நிலையில் ஒரு மின்கம்பம் உள்ளது. அடிப்பகுதியில் காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இது தொடர் மழை காலமாக இருப்பதால் தண்ணீர் தேங்கி மின்கம்பம் சாய்வதற்குள் மின்வாரிய அதிகாரிகள் அதை மாற்றுவார்களா?
பொதுமக்கள், கொளத்துப்பாளையம்புதூர்.
மூடப்படாத குழி
சிவகிரி பேரூராட்சி 3-வது வார்டு மின்வாரிய பவர் ஹவுஸ் எதிரில் குடிநீர் குழாய் பணிக்காக குழி தோண்டினார்கள். ஆனால் அந்த குழியை மூடாமல் விட்டு விட்டார்கள். 10 நாட்களாக குழி அப்படியே உள்ளது. இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் யாராவது குழி தெரியாமல் இறங்கிவிட்டால் அசம்பாவிதம் ஏற்பட்டு விடும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான அந்த குழியை விரைந்து மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சிவகிரி.
குண்டும்-குழியுமான ரோடு
கோபி கல்லூரி பிரிவில் இருந்து பங்களாப்புதூர் செல்லும் சாலையில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரோடு மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி விழுகிறார்கள். தொடர்ந்து மழை பெய்து வருவதால் ரோடு மேலும் மோசமடைந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பழுதடைந்த சாலையை உடனே சீரமைக்க வேண்டும்.
நாகராஜன், அரக்கன்கோட்டை.
ஆபத்தான கிணறு
கோபி 11-வது வார்டில் அய்யப்பா நகர் பூங்கா அருகில் குடியிருப்பு பகுதியில் ஆபத்தான திறந்த வெளி கிணறு உள்ளது. சுற்றுச்சுவர் இல்லாத இந்த கிணற்றில் இருந்து விஷ பூச்சிகள் வீடுகளுக்குள் வந்துவிடுகின்றன. மேலும் அந்த பகுதியில் சிறுவர், சிறுமிகள் விளையாடுகிறார்கள். எனவே ஆபத்தான அந்த கிணற்றை சுற்றி சுவர் எழுப்பவோ அல்லது மூடி போடவோ சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்
பொதுமக்கள், கோபி.
பாதையில் ேதங்கும் தண்ணீர்
கிளாம்பாடி பேரூராட்சிக்கு உள்பட்ட பசுமை நகரில் பாதையில் வாய்க்கால் தண்ணீர் தேங்கி உள்ளது. இதில் மழை தண்ணீரும் கலந்து நீண்ட நாட்களாக தேங்கி கிடக்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு தொற்று நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. மேலும் விஷ பூச்சிகளும் வீடுகளுக்குள் வந்துவிடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற ஆவன செய்வார்களா?
பொதுமக்கள், கிளாம்பாடி.
Related Tags :
Next Story