கோபியில் நிலம் விற்பதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.1 கோடி மோசடி- 2 பேர் மீது வழக்கு


கோபியில் நிலம் விற்பதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.1 கோடி மோசடி- 2 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 4 Nov 2021 1:32 AM IST (Updated: 4 Nov 2021 1:32 AM IST)
t-max-icont-min-icon

கோபியில் நிலம் விற்பதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.1 கோடி மோசடி செய்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஈரோடு
கோபியில் நிலம் விற்பதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.1 கோடி மோசடி செய்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ரூ.1 கோடி
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் பாலமுருகன் நகரை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 43). நூற்பாலை வைத்து நடத்தி வருகிறார். இவரிடம் கோபி நல்லகவுண்டம்பாளையத்ைத சேர்ந்த 2 பேர் தங்களிடம் லக்கம்பட்டியில் ஒரு ஏக்கர் 17 சென்ட் நிலம் உள்ளதாகவும், நல்லகவுண்டம்பாளையத்தில் ஒரு நிறுவனம் உள்ளதாகவும், அதை விற்பனை செய்ய உள்ளோம் என்றும் கூறி உள்ளார்கள். இந்த சொத்துகளை ரூ.10 கோடிக்கு வாங்கி கொள்ள மகேஸ்வரன் ஒப்புக்கொண்டார்.
அதன்பிறகு ரூ.1 கோடியை மகேஸ்வரன் அவர்கள் தெரிவித்த வங்கி கணக்கில் செலுத்தினார். அப்போது அவர்கள் 2 பேரும் சொத்தின் மீது உள்ள வங்கி கடன் செலுத்திவிட்டு தடையின்மை சான்று பெற்று தருவதாகவும், அதன் பிறகு மீதமுள்ள தொகையை தருமாறும் அவர்கள் தெரிவித்தனர். ஆனால் வங்கியில் இருந்து தடையின்மை சான்று பெற்று தராமல் அவர்கள் காலம் தாழ்த்தி வந்தனர்.
2 பேர் மீது வழக்கு
இந்தநிலையில் அந்த நிறுவனம் வங்கியின் ஏலத்துக்கு சென்றுவிட்டதாகவும், வேறு ஒருவர் அந்த நிறுவனத்தை வாங்கிவிட்டதாகவும் மகேஸ்வரனுக்கு தெரியவந்தது. இதையடுத்து மகேஸ்வரன் அவர்களிடம் சென்று தான் முன்பணமாக கொடுத்த ரூ.1 கோடியை திருப்பி தருமாறு கேட்டு உள்ளார். ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்காமல் கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து மகேஸ்வரன் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனிடம் புகார் மனு கொடுத்தார். இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மகேஸ்வரனிடம் ரூ.1 கோடியை மோசடி செய்த 2 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story