பல கோடி ரூபாய் மதிப்புள்ள பழமையான விநாயகர் சிலை பறிமுதல்


பல கோடி ரூபாய் மதிப்புள்ள பழமையான விநாயகர் சிலை பறிமுதல்
x
தினத்தந்தி 5 Nov 2021 12:32 AM IST (Updated: 5 Nov 2021 12:32 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற பல கோடி மதிப்புள்ள பழமையான விநாயகர் சிலையை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய சரக்கக பிரிவில் இருந்து வெளிநாட்டிற்கு அனுப்புவதற்காக வந்த பாா்சல்களை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் ஆய்வு செய்தனா். அப்போது காஞ்சீபுரத்தில் இருந்து வெளிநாட்டுக்கு புதிதாக தயாரிக்கப்பட்ட ஒரு மெட்டல் சிலையை அனுப்புவதற்காக சுங்க இலாகா அதிகாரிகளிடம் ஒரு விண்ணப்பமும் சிலைக்கான மாதிரி சிறிய சிலையும் வந்து இருந்தது. அதை அதிகாரிகள் ஆய்வு செய்த போது சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து, காஞ்சீபுரத்தில் உள்ள முகவரிக்கு சென்று சோதனை செய்தனர். 5.25 அடி உயரத்தில் 130 கிலோ எடை கொண்ட பித்தளையில் செய்யப்பட்ட விநாயகர் சிலை ஒன்று இருந்தது. இந்த சிலை மிகவும் பழமையான சிலை என தெரியவந்தது. உடனே சிலையை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

பல கோடி ரூபாய் மதிப்பு

தொல்லியல் துறை அதிகாரிகள் சிலையை ஆய்வு செய்த போது, அந்த சிலை 400 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையானது என தெரியவந்தது. மேலும் விஜயநகர அரசர் காலத்தில் உள்ள சிலை எனவும் கூறப்படுகிறது.

இந்த சிலை காஞ்சீபுரத்தில் உள்ள மிகப்பழமையான கோவிலில் இருந்த சிலையாக இருந்திருக்கலாம் என்றும், இதை தற்போது வெளிநாட்டுக்கு பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து சிலையை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த சிலையை வெளிநாட்டிற்கு அனுப்ப அனுமதி கேட்ட ஏஜென்சி, சிலை வைக்கப்பட்டிருந்த காஞ்சீபுரம் வீட்டின் உரிமையாளா்கள் உள்பட பல தரப்பினரிடமும் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை விமான நிலையத்தில் பல கோடி ரூபாய் மதிப்புடைய பழங்கால சிலை ஒன்று வெளிநாட்டுக்கு கடத்த முயன்றபோது பிடிப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

Next Story