சாலையில் பாய்ந்தோடும் மழைநீரால் அவதி கால்வாய் அமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல்


சாலையில் பாய்ந்தோடும் மழைநீரால் அவதி கால்வாய் அமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 4 Nov 2021 8:01 PM GMT (Updated: 4 Nov 2021 8:01 PM GMT)

சாலையில் பாய்ந்தோடும் மழைநீரால் அவதிக்குள்ளான பொதுமக்கள் கால்வாய் அமைக்கக்கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையின் காரணமாக மூலகழனி அருகே கூடுவாஞ்சேரி-கொட்டமேடு சாலையில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியதால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். இந்த நிலையில் நேற்று காலை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலையின் நடுவில் நின்று கொண்டு மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வகுமார், காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹரிகிருஷ்ணன், சசிகலா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தீர்வு காணப்படும்

அப்போது அவர்கள் கூறியதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் கனமழை பெய்யும் போது இந்த சாலையில் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் நாங்கள் வெளியே செல்ல முடியாமல் மிகவும் அவதிக்குள்ளாகிறோம். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை தண்ணீர் முறையாக செல்வதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை, எனவே இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண கால்வாய் அமைக்க வேண்டும், மேலும் இதன் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் தேங்கி இருப்பதால் வீடுகளை சுற்றி விஷ பூச்சிகள் வருகிறது. என்று அதிகாரிகளிடம் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

இது குறித்து நடவடிக்கை எடுத்து பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று பொதுமக்களிடம் திட்ட இயக்குனர் செல்வகுமார் உறுதியளித்தார். அப்போது திட்ட இயக்குனருடன் காயரம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயகாந்தி புஷ்பராஜ், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் திருவாக்கு, ஊராட்சி செயலர் வடிவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

மழைநீர் வெளியேற நடவடிக்கை

இதனையடுத்து ஊராட்சி நிர்வாகம் பொக்லைன் எந்திரம் மூலம் தற்காலிகமாக சாலைகளில் தேங்கி இருந்த மழை நீரை வெளியேற நடவடிக்கை எடுத்தனர். மறியல் காரணமாக கூடுவாஞ்சேரி- கொட்டமேடு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Next Story