கோபி பகுதியில் பலத்த மழை தடப்பள்ளி வாய்க்கால் கரையில் உடைப்பு; 2 ஆயிரம் ஏக்கர் நெல்பயிர்கள் நீரில் மூழ்கின


கோபி பகுதியில் பலத்த மழை தடப்பள்ளி வாய்க்கால் கரையில் உடைப்பு; 2 ஆயிரம் ஏக்கர் நெல்பயிர்கள் நீரில் மூழ்கின
x
தினத்தந்தி 6 Nov 2021 2:24 AM IST (Updated: 6 Nov 2021 2:24 AM IST)
t-max-icont-min-icon

கோபி பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக தடப்பள்ளி வாய்க்கால் கரையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் உள்ள 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நெல் பயிர்கள் நீரில் மூழ்கின.

கடத்தூர்
கோபி பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக தடப்பள்ளி வாய்க்கால் கரையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் உள்ள 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நெல் பயிர்கள் நீரில் மூழ்கின. 
தடப்பள்ளி- அரக்கன்கோட்டை வாய்க்கால்
ஈரோடு மாவட்டம் கொடிவேரியில் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது. இந்த தடுப்பணையில் இருந்து பிரிந்து செல்லும் தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசன பகுதிகளுக்கு ஆண்டுதோறும் 2 போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். 
இந்த நிலையில் 2-ம் போக பாசனத்துக்காக கடந்த மாதம் தடப்பள்ளி- அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. 
வாய்க்கால் கரையில் உடைப்பு
கோபி அருகே உள்ள கூகலூர், தொட்டிபாளையம், நஞ்சை கோபி உள்பட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெற்பயி்ா சாகுபடி நடந்து வருகிறது. 
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை நேற்று காலை வரை விடிய விடிய நீடித்தது. இதனால் பல்வேறு கிராமங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.  மேலும் மழை காரணமாக தொட்டியபாளையம் என்னும் இடத்தில் செல்லும் தடப்பள்ளி வாய்க்காலின் கூகலூர் கிளை வாய்க்காலில் சென்ற தண்ணீருடன், மழைநீரும் கலந்து பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அங்குள்ள வாய்க்கால் கரையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. 
2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான...
வெளியேறிய தண்ணீர் அந்த பகுதியில் உள்ள நெல் வயல்களில் புகுந்து ஓடியது. இதனால் 2 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. 
இதுபற்றி அறிந்ததும் பொதுப்பணித்துறை அதிகாரிகள்  சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வாய்க்கால் கரையில் உடைப்பு ஏற்பட்ட இடத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக மணல் மூட்டைகள் கொண்டு வரப்பட்டு உடைப்பு ஏற்பட்ட இடத்தில் தண்ணீர் வெளியேறாதபடி அடுக்கி வைக்கப்பட்டன. இதனிடையே கொடிவேரி அணையில் இருந்து தடப்பள்ளி வாய்க்காலில் தண்ணீர் திறப்பும் நிறுத்தப்பட்டது. 
ஆய்வு
இதுபற்றிய தகவல் கிடைத்தும் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. விரைந்து சென்று வாய்க்கால் கரை உடைப்பு ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கரை உடைப்பை சரி செய்ய அவர் அங்கிருந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது கோபி ஒன்றியக்குழு தலைவர் மவுதீஸ்வரன், ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்கள் வேலுமணி, குறிஞ்சி நாதன், நகர செயலாளர் பிரினியோ கணேஷ், நகர தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முத்துராமன், கலிங்கியம் அருள் உள்பட பலர் இருந்தனர்.  
இதேபோல் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி சென்று தடப்பள்ளி வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அங்கிருந்த அதிகாரிகளிடம், வாய்க்கால் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்கவும் கலெக்டர் உத்தரவிட்டார். 

Next Story