சென்னிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா தொடங்கியது; காப்பு கட்டி பக்தர்கள் விரதத்தை தொடங்கினர்


சென்னிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா தொடங்கியது; காப்பு கட்டி பக்தர்கள் விரதத்தை தொடங்கினர்
x
தினத்தந்தி 5 Nov 2021 9:29 PM GMT (Updated: 5 Nov 2021 9:29 PM GMT)

சென்னிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா தொடங்கியது. இதையொட்டி காப்பு கட்டி பக்தர்கள் விரதத்தை தொடங்கினர்.

ஈரோடு
சென்னிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா தொடங்கியது. இதையொட்டி காப்பு கட்டி பக்தர்கள் விரதத்தை தொடங்கினர். 
சென்னிமலை முருகன் கோவில்
சென்னிமலையில் மலை மீது முருகன் கோவில் உள்ளது. கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் செய்யப்பட்ட இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் கந்த சஷ்டி விழா தொடங்கி 6 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
நிறைவு நாளான 6-வது நாளில் சென்னிமலை நகரின் முக்கிய வீதியான 4 ராஜ வீதிகளில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். ஆனால் கொரோனா பரவுதலை தடுக்கும் வகையில் கடந்த ஆண்டு கட்டுப்பாடுகளுடன் எளிய முறையில் கந்த சஷ்டி விழா நடைபெற்றது. அதேசமயம் சூரசம்ஹார நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. 
கந்த சஷ்டி விழா 
இதேபோல் இந்த ஆண்டும் கொரோனா பரவுதலை தடுக்கும் வகையில் கட்டுப்பாடுகளுடன் கந்த சஷ்டி விழா நேற்று தொடங்கியது. நேற்று காலை 8 மணி அளவில் சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் வள்ளி- தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. அப்போது உற்சவமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தனர்.
கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் கைலாசநாதர் கோவிலில் இருந்து உற்சவமூர்த்திகளை படிக்கட்டுகள் வழியாக மலைக்கோவிலுக்கு அழைத்து செல்லும் நிகழ்ச்சி நடைபெறவில்லை. இதனால் மலைமேல் உள்ள முருகன் கோவிலில் உற்சவமூர்த்திகள் இல்லாமல் நேற்று காலை 10.30 மணி அளவில் யாகசாலை பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்கி கலச பூஜை, அபிஷேகம் ஆகியவை நடைபெற்றது. 
காப்பு கட்டி...
அப்போது பக்தர்கள் தங்களது கைகளில் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். இதைத்தொடர்ந்து மதியம் 12 மணி அளவில் மூலவருக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து சென்றனர். 
வருகிற 10-ந் தேதி வரை தினமும் காலை 10 மணிக்கு மேல் யாகசாலை பூஜை, அபிஷேக பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் கந்தசஷ்டி விழா குழுவினர் முன்னிலையில் நடைபெறுகிறது.
விழாவையொட்டி சென்னிமலை கோவில் செயல் அலுவலர் மு.ரமணி காந்தன் உத்தரவின் பேரில் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவரையும் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற கோரி கோவில் பணியாளர்கள் அறிவுறுத்தினர்.
கோபி
இதேபோல் கோபி பச்சைமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் கந்த சஷ்டி விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி சண்முகர் வள்ளி-தெய்வானைக்கு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து சாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சமூக இடைவெளியை விட்டு சாமியை வழிபட்டு சென்றனர்.

Next Story