பொன்னேரி பகுதியில் வெள்ளம் பாதித்த இடங்களை அமைச்சர், கலெக்டர் ஆய்வு
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதற்கிடையே, ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் நீர்த்தேக்கம் நிரம்பியதால் 17 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. இதன் காரணமாக ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் ஆரணி ஆற்றில் அளவுக்கதிகமாக நீர்வரத்து காணப்பட்டதால் பொன்னேரி பகுதியில் அடங்கிய சோமஞ்சேரி, ரெட்டிபாளையம், பெரும்பேடு குப்பம், தத்தைமஞ்சி இடையில் ஆற்றங்கரை உடைப்பு மற்றும் ஆண்டார்மடம் கிராமத்தின் வழியாக ஆரணி ஆற்றின் மீது செல்லும் காட்டூர் கடப்பாக்கம் ஆண்டார்மடம் நெடுஞ்சாலை உடைப்பு ஏற்பட்டது. இதனால் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆற்றுநீர் குடியிருப்புகளில் புகுந்தன. மேலும், பல ஆயிரம் ஏக்கர் நெல் நடவு வயல்கள் மூழ்கின. இந்நிலையில் பால்வளத்துறை அமைச்சர் நாசர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பிஜான்வர்கீஸ், உதவி கலெக்டர் (பயிற்சி) அனாமிகாரமேஷ், பொன்னேரி எம்.எல்.ஏ. துரைசந்திரசேகர், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ., டி.ஜே.கோவிந்தராஜன், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் ஜெயக்குமார், மீன்வளத்துறை மாவட்ட உதவி இயக்குனர் வேலன் மற்றும் பொன்னேரி வருவாய் துறை உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் மனோபுரம், சோமஞ்சேரி ரெட்டிபாளையம் வஞ்சிவாக்கம், அவுரிவாக்கம் ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டனர்.
மேலும், சாலை துண்டிப்பால் பாதிக்கப்பட்ட ஆண்டார்மடம் கிராமத்திற்கு பழவேற்காடு ஏரியில் இருந்து ஆரணி ஆற்றின் வழியாக படகில் சென்று ஆய்வு செய்தனர்.
Related Tags :
Next Story