திருட்டு வழக்கில் தொடர்புடைய வாலிபரை துரத்தி பிடித்த போலீஸ் இன்ஸ்பெக்டர்
திருட்டு வழக்கில் தொடர்புடைய வாலிபரை துரத்தி பிடித்த போலீஸ் இன்ஸ்பெக்டர்
கருமத்தம்பட்டி
போலீசாரை பார்த்ததும் ஓட்டம் பிடித்த திருட்டு வழக்கில் தொடர்புடைய வாலிபரை போலீஸ் இன்ஸ்பெக்டர் துரத்தி பிடித்தார்.
தப்பி ஓடினார்கள்
கோவை அடுத்த சூலூர்-நீலம்பூர் பைபாஸ் சாலையில் சூலூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.
அப்போது அந்த 2 பேரும் திடீரென்று வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடினார்கள். இது குறித்து போலீசார் இன்ஸ்பெக்டர் மாதையனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். பின்னர் அவர் தப்பி ஓடியவர்கள் குறித்து அடையாளம் கேட்டறிந்து அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டார்.
துரத்தி பிடித்தார்
அப்போது தப்பி ஓடிய மர்ம நபர்கள் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்தனர். அந்த வாகனத்தை இன்ஸ்பெக்டர் மாதையன் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். உடனே அவர்கள் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடினார்கள்.
உடனே இன்ஸ்பெக்டர் மாதையன், அவர்களை பின்தொடர்ந்து ஓடி சென்று துரத்தினார். சிறிது தூரம் துரத்திச்சென்றார். அதில் ஒருவனை மடக்கி பிடித்தார். மற்றொருவன் தப்பிஓடிவிட்டான். பிடிபட்டவரை போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினார்கள்.
மற்றொருவருக்கு வலைவீச்சு
அதில் அவர் ராமநாதபுரம் மாவட்டம் தங்கப்பா நகரைச் சேர்ந்த ஹரிஹரசுதன் (வயது 23) என்பதும், தப்பி ஓடிய மற்றொருவர் சென்னையை சேர்ந்த சங்கர் என்பதும் தெரிய வந்தது. மேலும் 2 பேரும் கோவையில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்ததுடன், பல இருசக்கர வாகனங்களை திருடியதும் தெரியவந்தது.
தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதுடன், தப்பி ஓடியவரை வலைவீசி தேடி வருகிறார்கள். போலீஸ் இன்ஸ்பெக்டர் தப்பிஓடியவர்களை துரத்தி செல்லும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
Related Tags :
Next Story