தொற்று நோய் பரவாமல் பாதுகாத்து கொள்ள பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன? சென்னை மாநகராட்சி அறிவுரை
பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
மழையின் காரணமாக அடித்துவரப்பட்ட குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடும், அதனால் தொற்றுநோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் கீழ்கண்ட பாதுகாப்பு அறிவுரைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.
* குடிநீரை 10 அல்லது 20 நிமிடங்களுக்கு நன்கு கொதிக்கவைத்து பின்னர் ஆறவைத்து பருக வேண்டும்.
* வீடுகளில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி அல்லது தரைமட்ட குடிநீர் தொட்டியில் குளோரின் கலந்து பயன்படுத்த வேண்டும்.
*கைகளை அடிக்கடி சோப்பு பயன்படுத்தி நன்கு தேய்த்து கழுவ வேண்டும்.
* சாலையோரங்களில் விற்கப்படும் ஈ மொய்த்த மற்றும் தூசு படிந்த உணவு பண்டங்களை தவிர்க்க வேண்டும்.
*திறந்தவெளியில் மலம், சிறுநீர் கழிப்பதை தவிர்க்க வேண்டும்.
* கொசுப்புழு உற்பத்தியை தடுக்க சுற்றுப்புறத்தில் நீர் தேங்கக்கூடிய தேவையற்ற பொருட்களை அகற்ற வேண்டும்.
மேலும், மழைக்கால நோய்களான சளி, காய்ச்சல், இருமல், வயிற்றுப்போக்கு மற்றும் சேற்றுப்புண் போன்ற பாதிப்புகள் இருப்பின் உடனடியாக தங்கள் அருகாமையில் உள்ள மாநகராட்சி சுகாதார நிலையம் அல்லது மாநகராட்சியின் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமில் டாக்டரை அணுகி சிகிச்சை எடுக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இேதபோல் ஆவடி மாநகராட்சி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தற்போது மழை காலமாக இருப்பதால், பொது மக்கள் அவசியமின்றி வெளியில் வர வேண்டாம், தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்கவும். சூடான உணவு பொருட்களை சாப்பிடுங்கள். காய்ச்சல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் அருகிலுள்ள அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் செல்லவும். சாலைகளில் தேங்கியுள்ள தண்ணீரில் நடக்க நேரிட்டால் வெறும் காலில் செல்ல வேண்டாம். வீடுகளில் மழை தண்ணீர் தேங்கியுள்ள ஆட்டு உரல், சிரட்டை உள்ளிட்ட பொருட்கள் மற்றும் பாத்திரங்களை அகற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story