இலங்கை ரவுடியின் கூட்டாளிகளை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு
இலங்கை ரவுடியின் கூட்டாளிகளை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு
கோவை
இலங்கை ரவுடி அங்கொடா லக்கா (வயது 35). இவர் மீது இலங்கையில் பல்வேறு கொலைகள், கொள்ளை வழக்குகள் உள்ளன. இதனிடையே இலங்கையில் இருந்து தப்பி தமிழகம் வந்த அவர், கடந்த ஆண்டு ஜூலை மாதம் கோவையில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இவரது உடல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவரது உடல் மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி மதுரையை சேர்ந்த வக்கீல் சிவகாமி சுந்தரி, ஈரோட்டை சேர்ந்த தியானேஸ்வரன், அங்கொடா லக்காவின் காதலி அம்மானிதான்ஷி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
இதனிடையே அங்கொடா லக்காவின் கூட்டாளிகள் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் பெங்களூருவில் பதுங்கி இருந்த நளின் சதுரங்கா என்ற சனுக்கா தனநாயகா (38), கோபாலகிருஷ்ணன் (46) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு மாவட்டம் பெருந்துறை கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவர்கள் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து உள்ளனர். அவர்களிடம் இலங்கை அங்கொடா லக்கா எவ்வாறு தமிழகத்திற்கு தப்பி வந்தார், தமிழகத்தில் எங்கெங்கு தங்கியிருந்தார், அவருக்கு உதவி செய்தது யார், யார் என்பது குறித்து விசாரிக்க திட்டமிட்டு உள்ளனர்.
இதற்காக சிறையில் உள்ள அங்கொடா லக்கா கூட்டாளிகள் இருவரையும் காவலில் எடுக்க அனுமதி கோரி கோவை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் நேற்று மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வருகிறது.
Related Tags :
Next Story