பிறந்தநாளில் இளம்பெண் தற்கொலை
பிறந்தநாளில் இளம்பெண் தற்கொலை
கோவை
கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த வியாபாரியின் 18 வயது மகள் கோவையில் ஒரு பள்ளியில் கடந்த 2019-ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்து வந்தார். அவர் படிப்பில் சரிவர கவனம் செலுத்தவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் கடந்த ஆண்டு, இளம் பெண்ணான அவரை சொந்த ஊரான சேலம் மாவட்டம் கெங்கவல்லி பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு வியாபாரி அனுப்பி வைத்தார்.
இந்த நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன், இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் அவ்வப்போது செல்போனில் பேசிக் கொண்டனர். நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
இந்த காதல் விவகாரம் இளம் பெண்ணின் தந்தையான வியாபாரிக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் தனது மகளுக்கு அறிவுரை கூறி கண்டித்தார். பின்னர் அவரை கடந்த செப்டம்பர் மாதம் கோவைக்கு அழைத்து வந்தார். பின்னர் இளம் பெண்ணிடம் இருந்த செல்போனை வாங்கி வைத்துக் கொண்டார். செல்போன் இல்லாததால் தனது காதலனை தொடர்பு கொண்டு பேச முடியவில்லை என்று அவர் மன வேதனையில் இருந்து உள்ளார்.
இதற்கிடையே நேற்று இளம் பெண்ணுக்கு பிறந்தநாள் என்பதால் காலை 7 மணியளவில் குளித்து முடித்து தனது தந்தை வாங்கிக் கொடுத்த புத்தாடையை அணிந்து கொண்டு தன் அறைக்கு சென்று பூட்டிக்கொண்டார்.
தூக்குப்போட்டு தற்கொலை
தனது அறைக்கு சென்ற மகள் நீண்ட நேரமாக கதவை திறக்காததால், சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை தட்டினர். ஆனால் கதவு திறக்கவில்லை. எனவே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
இதில், புத்தாடை அணிந்த நிலையில் அந்த இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கினார். இதைப்பார்த்து இளம் பெண்ணின் பெற்றோர் கதறி துடித்தனர். இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சிங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான போலீசார், இளம் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், பிறந்தநாள் தினத்தன்று காதலுடன் பேச முடியாத விரக்தியில் அந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story