பாசன கால்வாய்கள் புதர்மண்டி கிடப்பதால் கடைமடைக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல்
பாசன கால்வாய்கள் புதர்மண்டி கிடப்பதால் கடைமடைக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல்
பொள்ளாச்சி
புதர்மண்டி கிடக்கும் பாசன கால்வாய்களால் கடைமடைக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதனால் பழைய ஆயக்கட்டு விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.
புதர்மண்டி கிடக்கும் கால்வாய்
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை மூலம் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகள் பயன்பெறுகின்றன. இதில் பழைய ஆயக்கட்டு பாசனத்தில் பெரியணை, வடக்கலுர், அரியாபுரம், பள்ளிவிளங்கால், காரப்பட்டி ஆகிய 5 கால்வாய்கள் மூலம் 6400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
பழைய ஆயக்கட்டிற்கு உட்பட்ட 5 வாய்க்கால்களில் முதல் போக பாசனத்திற்கு கடந்த மே மாதம் 15-ந் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது 2-ம் போக பாசனத்திற்கும் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் தற்போது மழை பெய்து வருவதால் தண்ணீர் திறப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
தண்ணீர் செல்வதில் சிக்கல்
இதற்கிடையில் கால்வாய் தூர்வாராமல் புதர்மண்டி கிடப்பதால் கடைமடை வரை தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர். இது குறித்து பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் கூறியதாவது:-
பழைய ஆயக்கட்டு பாசன கால்வாய்கள் புதர்மண்டி அணையில் இருந்து 2-ம் போகத்திற்கு தண்ணீர் திறக்கும் முன், பாசன கால்வாய்களை தூர்வார வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
2-ம் போகத்துக்கு திறப்பு
ஆனால் இதுவரைக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கால்வாயை தூர்வாருவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதற்கிடையில் 2-ம் போகத்திற்கு தண்ணீர் திறக்கப் பட்டு மழையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
மேலும் கால்வாய்களை தூர்வாரதால் 2-ம் போகத்திற்கு நாற்று விடுவதற்கு விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்க கூட்டத்திலும் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கைவிட வேண்டும்
மேலும் பாசனம், குடிநீர் தேவைக்கு தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளதால் ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் நடத்தும் ஆர்ப்பாட்டத்திலும் விவசாயிகள் கலந்துகொள்வார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story