கோவையில் இறந்தது இலங்கை ரவுடி அங்கொடா லக்கா
கோவையில் இறந்தது இலங்கை ரவுடி அங்கொடா லக்கா
கோவை
இலங்கை தலைநகர் கொழும்புவை சேர்ந்தவர் அங்கொடா லக்கா (வயது 35). இவர் மீது இலங்கையில் பல்வேறு கொலைகள், கொள்ளை வழக்குகள் உள்ளன. பிரபல ரவுடியான இவரை இலங்கை போலீசார் சர்வதேச குற்றவாளியாக அறிவித்து தேடி வந்தனர். இலங்கை போலீசார் தீவிரமாக தேடி வந்ததால், அங்கொடா லக்கா இலங்கையில் இருந்து தப்பி தமிழகம் வந்தார். கோவையில் அவர் பிரதீப் சிங் என்ற பெயரில் வசித்து வந்தார். அவருடன் காதலி அம்மானி தான்ஷி இருந்தார்.
இந்த நிலையில் இலங்கை ரவுடி அங்கொடா லக்கா கோவையில் கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் மர்மமான முறையில் உயிரிழந்தார். கோவை அரசு ஆஸ்பத்திரியில் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து அவரது உடலை காதலி அம்மானி தான்ஷி உள்ளிட்டோர், அவர் இலங்கை ரவுடி என்பதை மறைத்து மதுரைக்கு கொண்டு சென்று தகனம் செய்தனர். இதுகுறித்து கோவை பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதனிடையே இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி மதுரையை சேர்ந்த வக்கீல் சிவகாமி சுந்தரி, ஈரோட்டை சேர்ந்த தியானேஸ்வரன், அங்கொடா லக்காவின் காதலி அம்மானி தான்ஷி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இதனிடையே இறந்தது இலங்கை ரவுடி தானா? என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் அவர் மீது இலங்கையில் ஏராளமான வழக்குகள் உள்ளதால், இறந்ததாக நாடகமாடி வழக்குகளில் இருந்து தப்ப முயற்சிக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டது.
எனவே இறந்தது இலங்கை ரவுடி அங்கொடா லக்கா தான் என்பதை உறுதி செய்ய அவரது குடும்ப உறுப்பினரின் டி.என்.ஏ. மாதிரியை எடுத்து பரிசோதனை செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்தனர்.
உறுதி செய்யப்பட்டது
இதற்காக அங்கொடா லக்காவின் குடும்ப உறுப்பினர்களின் டி.என்.ஏ. மாதிரியை அனுப்பி வைக்கும்படி சி.பி.சி.ஐ.டி. போலீசார், இலங்கையில் உள்ள போலீசாருக்கு கடந்த ஆண்டு கடிதம் எழுதினர். ஆனால் அப்போது இலங்கை மற்றும் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காணப்பட்டதால், இலங்கையில் உள்ள அவரது உறவினர்களிடம் இருந்து டி.என்.ஏ. மாதிரி பெறுவது தடை பட்டு வந்தது.
இந்த நிலையில் இலங்கை போலீசார் அங்கொடா லக்காவின் தாயாரின் டி.என்.ஏ. மாதிரியை எடுத்து தமிழகத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த டி.என்.ஏ. மாதிரியை பெற்றுக்கொண்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதனை அங்கொடா லக்காவின் டி.என்.ஏ. மாதிரியுடன் ஒப்பிட்டு பார்த்தனர். இதில் டி.என்.ஏ. மாதிரிகள் பொருந்தி சென்றதால், கோவையில் மர்மமான முறையில் உயிரிழந்தது அங்கொடா லக்காதான் என்பது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து இலங்கை போலீசாருக்கு, சி.பி.சி.ஐ.டி. போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story