ஊருக்குள் அடிக்கடி உலாவரும் காட்டுயானைகள்
ஊருக்குள் அடிக்கடி உலாவரும் காட்டுயானைகள்
துடியலூர்
கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான ஆனைக்கட்டி, பாலமலை, பொன்னூத்து அம்மன் கோவில் மலைப்பகுதிகளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இந்த காட்டுயானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அவ்வப்போது மலையடிவாரப் பகுதியில் உள்ள கிராமங்களுக்குள் வந்து விடுகின்றன. யானைகள் வராமல் இருக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருந்தபோதிலும் அந்த யானைகள் அடிக்கடி புகுந்து விடுகின்றன. சில நேரங்களில் மனித விலங்கு மோதல்களும்,உயிர் சேதமும் ஏற்பட்டு விடுகின்றன.
இதேபோல நேற்று அதிகாலை 4 மணியளவில் மலைப்பகுதியில் இருந்து இறங்கி வந்த 2 காட்டு யானைகள் கதிர்நாயக்கன்பாளையம் கணபதி நகர், நாகம்மாள் காலனி, மணி நகர், ரேணுகா புரம் கீரின் பீல்டு, லட்சுமி நகர் 3 உள்ளிட்ட பகுதிகளில் நடமாடி உள்ளன. மேலும் அருகிலுள்ள தோட்டத்திற்குள் புகுந்து அங்கிருந்த வாழை மரங்களை தின்றும், காலால் மிதித்தும் சேதப்படுத்தியுள்ளன. இவையனைத்தும் அங்குள்ள ஒரு வீட்டில் கண்காணிப்பு (சி.சி.டி.வி) கேமராவில் பதிவாகி இருந்தன. இந்த காட்சிகளை வைத்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
அதிகாலை 4 மணியளவில் யாகைள் வந்த நேரத்தில் தான் அங்கு பால்காரர் ஒருவர் பால் எடுத்து சென்றுள்ளார். அதிர்ஷ்டவசமாக யானைகளிடம் சிக்கவில்லை. மேலும் கடந்த 10 நாட்களில் 5 முறை காட்டுயானகைள் வந்துள்ளது கேமராவில் பதிவாகியுள்ளது. மலையடிவாரத்தில் உள்ள கிராமங்கள் தவிர, ஊர்களுக்குள் அடிக்கடி காட்டு யானைகள் உலா வருவது பொதுமக்களை பீதியடைய செய்துள்ளது. தொடர்ந்து யானைகள் நடமாட்டம் உள்ளதால், ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன்பே வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Related Tags :
Next Story