சென்னை விமான நிலையத்தில் ரூ.57½ லட்சம் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் துபாய், கொழும்பில் இருந்து கடத்தி வந்த ரூ.57 லட்சத்து 59 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 282 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 4 பெண்களிடமும் விசாரித்து வருகின்றனர்.
சென்னை விமான நிலையம்
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அந்த விமானத்தில் வந்த 3 பெண் பயணிகளை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர்.
அதிகாரிகளிடம் 3 பேரும் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்களது உடமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் 3 பேரையும் தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் 3 பேரும் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.
3 பேரிடம் இருந்தும் ரூ.38 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 763 கிராம் தங்கம் மற்றும் 90 கிராம் எடை கொண்ட 6 வளையல்களை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.
ரூ.57½ லட்சம் தங்கம்
அதேபோல் கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பெண் பயணியை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் அவர், உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.19 லட்சத்து 39 ஆயிரம் மதிப்புள்ள 429 கிராம் தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் ஓரே நாளில் 4 பெண் பயணிகளிடம் இருந்து ரூ.57 லட்சத்து 59 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 282 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 4 பெண்களிடமும் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story