கொசஸ்தலை ஆற்றில் தரைப்பாலங்களை மூழ்கடித்து கரைபுரண்டு ஓடிய வெள்ளம்


கொசஸ்தலை ஆற்றில் தரைப்பாலங்களை மூழ்கடித்து கரைபுரண்டு ஓடிய வெள்ளம்
x
தினத்தந்தி 18 Nov 2021 7:19 PM IST (Updated: 18 Nov 2021 7:19 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிப்பட்டு அருகே கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து 11-வது முறையாக தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

கிருஷ்ணாபுரம் அணை

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே ஆந்திர மாநிலம் அம்மபள்ளி கிராமத்தில் கிருஷ்ணாபுரம் அணை உள்ளது. இந்த அணை உள்ள பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் கிருஷ்ணாபுரம் அணை ஓரிரு நாட்களிலேயே முழு கொள்ளளவை எட்டி வருகிறது.

இம்முறையும் இந்த அணை முழு கொள்ளளவை எட்டியதால் ஆந்திர மாநில நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் கிருஷ்ணாபுரம் அணையின் இரு கதவுகளை திறந்து 1,200 கன அடி தண்ணீரை வெளியேற்றினார்கள். இந்த தண்ணீர் பள்ளிப்பட்டு கொசஸ்தலை ஆற்றில் வெள்ளமாக பாய்ந்தது. பள்ளிப்பட்டு நகர கொசஸ்தலை ஆற்றில் அதிகாலை 3 மணி அளவில் வெள்ளநீர் வந்து சேர்ந்தது.

தரைப்பாலத்தில் வெள்ளம்

இதையடுத்து பள்ளிப்பட்டு தாலுகாவில் உள்ள கீழ்கால் பட்டடை, சாமந்தவாடா, நெடியம், சொரக்காய் பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள தரைப்பாலங்களை மூழ்கடித்து வெள்ளம் முழுவேகத்துடன் பாய்ந்து சென்றது.

இதனால் இப்பகுதி மக்கள் தரைப்பாலங்களைக் கடக்க முடியாமல் தங்கள் கிராமத்திலேயே முடங்கினர். அத்தியாவசிய பொருட்களையும் வாங்க கூட இவர்களால் வெளியே செல்ல முடியவில்லை. இதைப்போல திருத்தணி ஒன்றியத்தில் உள்ள நல்லாட்டூர், வெங்கடாபுரம், பூனிமாங்காடு அருங்குளம், தாசி ரெட்டி கண்டிகை லட்சுமிபுரம், ஆற்காடு குப்பம், முத்து கொண்டாபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும் தங்கள் கிராமங்களை விட்டு வெளியே செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து 11-ஆவது முறையாக தண்ணீர் திறந்து விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story