பொள்ளாச்சியில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை
பொள்ளாச்சியில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை
பொள்ளாச்சி
பொள்ளாச்சி பகுதியில் விடிய, விடிய கனமழை கொட்டித் தீர்த்ததால் ஆழியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
விடிய, விடிய மழை
பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்த நிலையில் மாலை 6 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை விடிய, விடிய கொட்டி தீர்த்தது.
இதன் காரணமாக பல்லடம் ரோட்டில் 5 ரோடுகள் சந்திப்பு பகுதியில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இதேபோன்று முக்கிய சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
சுரங்கப்பாதையில் தண்ணீர்
மாக்கினாம்பட்டியில் இருந்து சந்திராபுரம் செல்லும் சாலையில் உள்ள ரெயில்வே சுரங்கபாதையில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மழைநீரை மோட்டார் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்றது.
இதேபோன்று கொள்ளுப்பாளையம், கோலார்பட்டி, சிங்கா நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுரங்கபாதைகளிலும் மழை நீர் குளம்போல் தேங்கி நின்றது. மேலும் தென்னந்தோப்புகளிலும் மழைநீர் புகுந்தது.
வெள்ளப்பெருக்கு
மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் ஆழியாறு அணையின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக இரவு 11 மணிக்கு அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. ஏற்கனவே அணை நிரம்பிய தால் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் ஆழியாற்றில் திறந்து விடப்பட்டது.
இதன் காரணமாக ஆழியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பின்னர் அணைக்கு வரும் தண்ணீர் அளவு குறைந்ததால் திறக்கப் படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது.
120 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 118.75 அடியாக உள்ளது. அணையில் இருந்து ஆற்றுக்கு 2500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. உபரிநீர் திறப்பதால் பள்ளிவிழங்கால் தடுப்பணை நிரம்பி வழிந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் குளிப்பதை தடுக்க அங்கு ஆழியாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் மழை அதிகமாக பெய்ததால் சின்னாறுபதியில் உள்ள மலைவாழ் மக்களை ஆழியாறில் உள்ள கோவில் தங்க வைப்பதற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன் மற்றும் வருவாய் துறையினர் மலைவாழ் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையை தொடர்ந்து மலைவாழ் மக்கள் அங்கிருந்து செல்ல விருப்பம் இல்லாததால் சின்னாறுபதியிலேயே தங்க வைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story