காஞ்சீபுரத்தில் பட்டா கத்தியுடன் ரவுடிகள் அட்டகாசம்


காஞ்சீபுரத்தில்  பட்டா கத்தியுடன் ரவுடிகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 19 Nov 2021 6:26 PM IST (Updated: 19 Nov 2021 6:26 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரத்தில் பட்டா கத்தியுடன் ரவுடிகள் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

ரவுடிகளுக்குள் மோதல்

காஞ்சீபுரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடியான ஸ்ரீதர் மறைவுக்குப் பிறகு காஞ்சீபுரத்தில் ஸ்ரீதர் போல கோலோச்ச வேண்டும் என தணிகா மற்றும் தினேஷ்க்கு இடையே போட்டி நிலவுகிறது. இதனால் அவ்வப்போது இவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு கொலைகளும், கொலை முயற்சிகளும் அரங்கேறி வந்தன. மேலும் மறைந்த ரவுடி ஸ்ரீதரை போலவே ஸ்ரீதரின் ஆதரவாளர்கள் சமீப நாட்களாக காஞ்சீபுரத்தில் உள்ள தொழில் அதிபர்களையும், வசதி படைத்தோரையும் மிரட்டி லட்சக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

சூப்பர் மார்க்கெட் சூறை

இந்த நிலையில் காஞ்சீபுரத்தில் சாலை தெரு பகுதியில் ஸ்ரீராம் என்பவர் சூப்பர் மார்க்கெட் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீராம் இடம், மறைந்த ஸ்ரீதரின் அடியாட்கள் லட்சக்கணக்கில் மாமூல் கேட்டு மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. அதற்கு அவர் பணம் தராத நிலையில் ஸ்ரீதரின் ஆதரவாளரான 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று ஹெல்மெட், மற்றும் முகமூடி அணிந்துக்கொண்டு கையில் பட்டா கத்தியுடன் சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்து கடையை சூறையாடினர். இதில் சூப்பர் மார்க்கெட்டில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வெளியேறிய நிலையில் தொடர்ந்து அந்தகும்பல் கடையை சூறையாடிவிட்டு தப்பிச் சென்றது.

4 பேருக்கு அரிவாள் வெட்டு

இந்த தாக்குதலுக்கு முன்பாக ஸ்ரீதரின் கூட்டாளியான ஏட்டு பிரபு என்பவரின் வீட்டுக்கு சென்ற தினேஷின் ஆதரவாளர்கள் அவரது 2 மகன்களையும் வீட்டுக்குள் புகுந்து சரமாரியாக வெட்டியுள்ளனர். மேலும் சூப்பர் மார்க்கெட்டில் சூரையாடிய பின்னர் சிறுவாக்கம் பகுதியில் ராஜமன்னார் மற்றும் வெங்கடேசன் ஆகியயோரை வெட்டி விட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் உத்தரவின் பேரில் சிவகாஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை பல்வேறு பகுதிகளில் தேடி வருகின்றனர்.

மறைந்த பிரபல ரவுடி ஸ்ரீதருக்கு பிறகு அவரது ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்படும் கோஷ்டி மோதலால் கோவில் நகரம் கொலை நகரமாக மாறி வருவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

மீண்டும் சட்ட விரோத சம்பவங்கள் தலை தூக்கி உள்ள நிலையில் காவல்துறை இதுபோன்ற ரவுடிகளை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story