தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 30 Nov 2021 10:53 PM IST (Updated: 30 Nov 2021 10:53 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி



செல்போன் கோபுரங்கள் வேண்டும்

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பகுதியில் சட்டப்பிரிவு 17 வகை நிலம் உள்ளதால் தனியார் செல்போன் கோபுரங்கள் இதுவரை அமைக்க அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் சந்தனம் மலையில் பி.எஸ்.என்.எல். கோபுரம் மட்டும் உள்ளது. ஆனால் பெரும்பாலான நேரம் செயல் இழந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே தனியார் செல்போன் கோபுரங்களுக்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும்.
மணிவர்மா, ஓவேலி.

பராமரிப்பு இல்லாத பூங்கா 

  கோவை பீளமேடு லட்சுமிபுரம் சின்னசாமி லே-அவுட்டில் சிறுவர் பூங்கா உள்ளது. இந்த பூங்கா பராமரிப்பு இல்லாமல் புதர்மண்டி கிடக்கிறது. இதனால் இங்கு பாம்புகள் உள்ளிட்ட விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. இதனால் அங்கு சிறுவர்கள் விளையாடும்போது ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இந்த சிறுவர் பூங்காவை பராமரிக்க வேண்டும்.
  கந்தன், பீளமேடு.

அதிகாரிகள் கவனிப்பார்களா?

  பொள்ளாச்சி சுற்றுலா சார்ந்த பகுதி என்பதால் வெளிமாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் நகரில் எங்கு பார்த்தாலும் சுவரொட்டிகள் ஓட்டப்பட்டும், சுவர் விளம்பரம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் சாலையின் நடுவில் உள்ள தடுப்புகள், பாலங்கள் மிகவும் அசுத்தமாக காணப்படுகிறது. எனவே நகரை அழகுப்படுத்தும் வகையில் சுவரொட்டிகள் ஒட்ட தடை விதிக்க வேண்டும்.
  கோபி, பொள்ளாச்சி

போக்குவரத்து பாதிப்பு

  பொள்ளாச்சி நகரில் சாலை அகலப்படுத்தப்பட்டு காந்தி சிலை பகுதியில் ரவுண்டானா அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் உடுமலை ரோட் டில் இருந்து கோர்ட்டு பகுதியில் பஸ் நிலையத்திற்கு வாகனங்கள் செல்லும் சாலையின் ஓரத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்கிறது. எனவே அங்கு வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும்.
  ராமகிருஷ்ணன், சின்னாம்பாளையம்.

தினத்தந்தி செய்தி எதிரொலி:
குடிநீர் குழாய் சரிசெய்யப்பட்டது 

  கோவை குனியமுத்தூரில் இருந்து சுண்டக்காமுத்தூர் செல்லும் பகுதியில் பொதுமக்கள் குடிநீர் பிடிக்கும் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக சென்றது. இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. அதன்பயனாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உடைந்த குழாயை சரிசெய்து உள்ளனர். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.
  சுகுந்தன், குனியமுத்தூர்.

சாக்கடை கால்வாய் அடைப்பு

  கோவை மாநகராட்சி 74-வது வார்டு ராமநாதபுரம் அருணாசலதேவர் காலனி 1 மற்றும் 2-வது வீதிகளில் சாக்கடை கால்வாய் அருகே குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் குப்பைகள் சாக்கடை கால்வாய்க்குள் விழுந்து நிரம்பியதால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் அதை சரிசெய்ய வேண்டும்.
  பிரதீப்குமார், ராமநாதபுரம்.

கால்நடைகள் தொல்லை

  கோவை மாநகரத்தில் பல இடங்களில் சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிந்து வருகின்றன. குறிப்பாக சுந்தராபுரம் மார்க்கெட் பகுதியில் அதிகளவில் மாடுகள் சாலையில் உலா வருவதால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. எனவே விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  சிவகுமார், சுந்தராபுரம்.

மேம்பாலம் தேவை

  கோவை துடியலூரில் இருந்து சரவணம்பட்டி செல்லும் சாலையில் தற்போது ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் இந்த சாலையில் தண்டவாளம் குறுக்கிடுவதால் ரெயில்கள் செல்லும்போது அடிக்கடி கேட் மூடப்படுகிறது. இதனால் அங்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து தண்டவாளம் கடக்கும் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும்.
  வாசு, துடியலூர்.

துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதி

  கோவை ரத்தினபுரி தயிர் இட்டேரி ரோடு புதுப்பாலம் அருகில் உள்ள மகேஸ்வரி நகரில் சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் இருக்கிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாததால் அது தேங்கி நிற்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உயர் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  செல்வகுமார், ரத்தினபுரி.

மின்விளக்குகள் இல்லை

  கோவை மாவட்டம் கெம்பநாயக்கன்பாளையம் ஸ்ரீ சாய்நகர், அன்புநகர், நியூ பாலாஜி நகர் பகுதியில் மின்விளக்கு வசதி இல்லை. இதனால் இரவு நேரத்தில் அங்கு இருள்சூழ்ந்து இருப்பதால் இரவில் பொதுமக்கள் நடந்து செல்ல பயப்படுகிறார்கள். அத்துடன் விஷப்பூச்சிகளின் நடமாட்டமும் அதிகமாக இருப்பதால் பயமாக இருக்கிறது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து இங்கு மின்விளக்கு வசதிகள் அமைக்க வேண்டும்.
  இளங்குமரன், கெம்பநாயக்கன்பாளையம்.

தெருநாய்கள் தொல்லை

  கோவை-சத்தி ரோட்டில் கணபதியை அடுத்து பாரதிநகர் எப்.சி.குடோன் செல்லும் சாலை அருகே தெருநாய்கள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. கூட்டங்கூட்டமாக சுற்றிதிரியும் நாய்கள், அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்துகிறது. சில நேரத்தில் வாகனங்களுக்குள்ளும் வந்து விழுகிறது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.
  அரசன், கணபதி.


Next Story