பெண்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டி பணம் பறித்தவர் கைது


பெண்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டி பணம் பறித்தவர் கைது
x
பெண்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டி பணம் பறித்தவர் கைது
தினத்தந்தி 1 Dec 2021 9:01 PM IST (Updated: 1 Dec 2021 9:01 PM IST)
t-max-icont-min-icon

பெண்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டி பணம் பறித்தவர் கைது

கோவை

சாலையில் செல்லும்போது பெண்களை படம் எடுத்து ஆபாசமாக சித்தரித்து மிரட்டி பணம் பறித்தவர்கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 2 துப்பாக்கிகள், பென்டிரைவ் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.


பெண்களை படம் எடுத்து மிரட்டல்


கோவை ஆவாரம்பாளையம் ரெயில்வே கேட் பகுதியில் சாலைகளில் செல்லும்  பெண்களை ஒருவர் தனது செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார். அவர் பெண்களை குறிவைத்து எடுப்பதால் அந்த பகுதியை சேர்ந்த சிலருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்கள் சத்தம் போட்டு கொண்டே அந்த படம் எடுத்த ஆசாமி  அருகில் ஓடி சென்று அவரை பிடிக்க முயன்றனர்.

ஆனால் சுதாரித்து கொண்ட அந்த ஆசாமி தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, "என் அருகே யாராவது வந்தால் உங்களை சுட்டு விடுவேன்"என கூறி அவர்களை மிரட்டியதாக தெரிகிறது.
 இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து வந்தனர். போலீசார் வருவதை பார்த்த அந்த ஆசாமி அங்கிருந்து தப்பித்து ஓட முயற்சித்தார். போலீசார் அவரை விரட்டி சென்று சுற்றி வளைத்து பிடித்தனர்.

துப்பாக்கிகள் பறிமுதல்

 அவரிடம் இருந்து 2 ஏர்கன் துப்பாக்கிகளையும், ஒரு பென் டிரைவையும் பறிமுதல் செய்தனர்.பின்னர் அவரை காட்டூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர் கோவை அவினாசி ரோடு, நவஇந்தியாவை சேர்ந்த சமீர் (வயது 37) என்பதும், தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

சமீரிடம் இருந்த பென்டிரைவை கம்ப்யூட்டரில் செலுத்தி போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ஏராளமான பெண்களின் புகைப் படங்கள், வீடியோக்கள் இருந் தன. அந்த புகைப்படங்கள் அனைத்தும் மார்பிங் செய்யப்பட்டு ஆபாசமாக உருவாக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-


சமீர், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலைகளில், கையில் செல்போனுடன் நின்று கொண்டு, அந்த வழியாக நடந்து செல்லக் கூடிய பெண்களை பார்த்துக்கொள்வார்.

ஆபாச படம்

இதில் அழகாக இருக்கும் பெண்களை 2 முதல் 3 நாட்கள் தொடர்ந்து கண்காணிக்கும் சமீர், அதன்பின் அவர்களை தனது செல்போனில் புகைப்படம், வீடியோ படமாக எடுப்பது வழக்கம்.
தொடர்ந்து அந்த புகைப்படத்தை மார்பிங் செய்து வைத்து கொண்டு போட்டோ எடுத்த பெண்களை நேரில் சந்திப்பார். பின்னர் தனது செல்போனில் ஆபாசமாக சித்தரித்து வைத்த அவர்களின் புகைப்படத்தை காட்டுவாராம். 

இதனை பார்த்ததும் அதிர்ச்சியாகும் பெண்களிடம், இந்த படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட கூடாது என்றால் நான் கேட்கும் பணத்தை தர வேண்டும். இல்லை என்றால் இதனை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என மிரட்டுவாராம்.

கைது

இதனால் பயந்து போகும் பல பெண்கள் அவர் கேட்கும் பணத்தை கொடுத்துள்ளதும் தெரியவந்தது. இப்படி பெண்கள் பயந்து பணம் கொடுப்பதை தனக்கு சாதகமாக்கி கொண்ட சமீர், இதனை வாடிக்கையாக செய்ய தொடங்கியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் சமீர் மீது தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

Next Story