பலத்த மழைக்கு 4 வீடுகள் இடிந்தன
கோட்டூர், அங்கலகுறிச்சியில் பலத்த மழைக்கு 4 வீடுகள் இடிந்தன. மேலும் மின்தடையால் விடிய விடிய மக்கள் அவதி அடைந்தனர்
பொள்ளாச்சி
கோட்டூர், அங்கலகுறிச்சியில் பலத்த மழைக்கு 4 வீடுகள் இடிந்தன. மேலும் மின்தடையால் விடிய விடிய மக்கள் அவதி அடைந்தனர்.
வீடுகள் இடிந்தன
பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேலும் அவ்வப்போது லேசான மழை பெய்தது. இதற்கிடையில் அங்கலகுறிச்சி, கோட்டூர் பகுதிகளில் மட்டும் இரவு 7 மணிக்கு பலத்த மழை பெய்தது. இந்த மழை இரவு 10 மணி வரை நீடித்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. அங்கலகுறிச்சி இந்திரா நகர் பகுதியில் 3 வீடுகள் இடிந்து விழுந்தன.
சில இடங்களில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. கோட்டூரில் மாற்றுத்திறனாளி ஒருவரது வீடு மழைக்கு தாக்குபிடிக்க முடியாமல் இடிந்து விழுந்தது. மேலும் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. அதை மழை நின்ற பின் பொதுமக்கள் வெளியேற்றினர். வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மாணவ-மாணவிகளின் நோட்டு, புத்தகங்கள் நனைந்தது. இதையடுத்து நேற்று வெயிலில் புத்தகங்களை காய வைத்தனர்.
மின்சாரம் துண்டிப்பு
இதற்கிடையில் அங்கலகுறிச்சியில் 3 இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தது. இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து அந்த பகுதியில் மின் வினியோகத்தை துண்டித்தனர். இதன் காரணமாக விடிய, விடிய மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் இருளில் அவதி அடைந்தனர். இதை தொடர்ந்து நேற்று காலை முதல் உடைந்த மின் கம்பங்களை அகற்றி விட்டு, புதிதாக மின் கம்பங்கள் அமைத்து மின்வாரிய அதிகாரிகள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், அங்கலகுறிச்சியில் மழைநீர் செல்ல நீர்வழிப்பாதை உள்ளது. இந்த பாதை தற்போது ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. மேலும் புதர்மண்டி கிடப்பதால் மழைநீர் செல்ல முடியாமல் வீடுகளுக்குள் புகுந்து விட்டது. மேலும் நீர்வழித்தடத்தில் உள்ள வீடுகளின் சுற்றுச்சுவரும் இடிந்து விழுந்தது. எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து நீர்வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
மழை அளவு
பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு விவரம் வருமாறு(மில்லி மீட்டரில்):-
சோலையார் 8, பரம்பிக்குளம் 12, ஆழியாறு 4, திருமூர்த்தி 3, வால்பாறை 4, மேல்நீராறு 1, கீழ்நீராறு 2, காடம்பாறை 4, சர்க்கார்பதி 14, வேட்டைக்காரன்புதூர் 7, மணக்கடவு 4, தூணக்கடவு 16, பெருவாரிபள்ளம் 16, அப்பர் ஆழியாறு 3, நவமலை 5, நல்லாறு 54.
Related Tags :
Next Story