தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு இல்லை யாரும் அச்சப்பட வேண்டாம்
தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு இல்லை யாரும் அச்சப்பட வேண்டாம்
கோவை
தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு இல்லை என்பதால் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்
விமான நிலையத்தில் ஆய்வு
தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோவை விமான நிலையத்தில் நேற்று ஆய்வு செய்தார். ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எடுக்கும் நடவடிக்கை குறித்து விமான நிலைய அதிகாரிகளுடன் ஆலோசித்தார்.
வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு செய்யப்பட்டு உள்ள மருத்துவ பரிசோதனை, சிகிச்சை மையம், ஸ்கேனர் வசதி ஆகியவற்றை யும் அவர் பார்வையிட்டார். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தடுப்பு நடவடிக்கை
ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் தென்னாப்பிரிக்காவில் பரவியதை தொடர்ந்து உலகம் முழுவதும் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் சுகாதாரத்துறை தேவையான தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது.
ஏற்கனவே கொரோனா, ஆல்பா, பீட்டா, காமா டெல்டா என்று பலவகை வந்தபோதிலும் தமிழகத்தில் தீவிர தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது 30 நாடுகளில் இந்த வைரஸ் 300 பேருக்கு மேல் பாதித்து உள்ளது.
முழுமையாக பரிசோதனை
மேலும் பெங்களூருவில் ஒமைக்ரோ வகை கொரோனாவால் 2 பேர் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்து உள்ளது. எனவே அருகிலுள்ள தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் சென்னை, மதுரை திருச்சி, கோவை சர்வதேச விமான நிலையங்களில் ஆய்வு செய்து வருகிறேன்.
ஒமைக்ரான் பரவல் அதிகம் உள்ள ஐரோப்பிய நாடுகள், தென் ஆப்பிரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட 13 நாடுகளில் இருந்து வரும் பயணிகள் முழுமையாக பரிசோதிக்கப்படுகிறார்கள். வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் 7 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவார்கள். அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள்.
3.2 லட்சம் டேக்பாத் கிட்
கோவையைப் பொறுத்தவரையில் கடந்த ஒரு மாதத்தில் 17 பயணிகள் இது போன்ற நாடுகளில் இருந்து வந்து உள்ளனர். அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. யாருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு இல்லை. இதுபோல் தமிழகத்தில் உள்ள 4 பன்னாட்டு விமான நிலையங்களில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் இந்த வைரஸ் யாருக்கும் இல்லை என்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இருந்தபோதிலும் தடுப்பு நடவடிக்கைகளுக்காக கூடுதல் பரிசோதனை கள் மேற் கொள்ளப்படுகிறது. ஒமைக்ரான் பரிசோதனைக்காக 3.2 லட்சம் டேக்பாத் கிட் கையிருப்பில் உள்ளது. மேலும் 1.5 லட்சம் கிட் வாங்கப்பட உள்ளன. தமிழக மக்கள் ஒமைக்ரான் வைரஸ் தொடர்பாக பீதியடைய தேவையில்லை.
தடுப்பூசி
தடுப்பூசிதான் உயிர் காக்கும் கருவி. எனவே தடுப்பூசி போடும் பணி தமிழகத்தில் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. முதல்கட்ட தடுப்பூசி 78 சதவீதம் பேருக்கும், 2-வது கட்ட தடுப்பூசி 44 சதவீதம் பேருக்கும் போடப்பட்டு உள்ளது.
தடுப்பூசி போடுவதால் 97.5 சதவீதம் உயிரிழப்பில் இருந்து தப்பிக்கலாம்.
எனவே பொதுமக்கள் இதில் கவனம் செலுத்தி தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசி போட முன்வர வேண்டும். கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தியதில் தமிழகம் முதன்மையாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி தடுப்பூசி போட்டதில் முன்மாதிரி யாகவும் விளங்குகிறது.
தனிவார்டு
ரூ.4 கோடியில் உருவாக்கப்பட்ட மரபணு பரிசோதனை கூடமும் தமிழகத்தில் உள்ளது. டெங்கு தடுப்பு நடவடிக்கையும் தீவிரப்படுத்தப் பட்டு உள்ளது. இதுவரை 617 பேருக்கு டெங்கு இருப்பது கண்டறியப் பட்டு உள்ளது. 1 லட்சத்து 36 ஆயிரம் மாதிரிகள் எடுக்கப்பட்டு டெங்கு பரிசோதனையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஒமைக்ரான் தனிவார்டு அமைக்கப் பட்டு உள்ளது. இதுபோன்று சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தனிவார்டு அமைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
போதிய விழிப்புணர்வு
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, ஒமைக் ரான் பாதிப்பை தடுக்க பொதுமக்கள் போதிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். முகக்கவசம் அணிவது போன்றவற்றில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா, அரசு ஆஸ்பத்திரி டீன் விமலா, தி.மு.க. கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா கவுண்டர் என்ற கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story