ஆக்கிரமித்து அமைத்ததாக கூறி கல்லார்குடி வனப்பகுதியில் குடிசைகள் அகற்றம்

ஆக்கிரமித்து அமைத்ததாக கூறி கல்லார்குடி வனப்பகுதியில் குடிசைகள் அகற்றம்
வால்பாறை
ஆக்கிரமித்து அமைத்த தாக கூறி கல்லார்குடி வனப்பகுதியில் குடிசை கள் அகற்றப் பட்டன. இதனால் வனத்துறை யினர் மீது மலைவாழ் மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
கல்லார்குடி மலைவாழ் மக்கள்
வால்பாறை அருகில் உள்ள தாய்முடி எஸ்டேட் பகுதியை ஒட் டிய ஆனைமலை புலிகள் காப்பகத்தின் மானாம்பள்ளி வனச்சரக வனப்பகுதிக்குட்பட்ட அடர்ந்த வனப்பகுதிக்குள் கல்லார் குடி மலைவாழ் கிராமம் உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு பெய்த கனமழையால் இந்த கிராமத்தில் மண்சரிவும் விரிசலும் ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகள் பாதிக்கப்பட்டது.
இதனால் இந்த கிராம மக்கள் அருகில் உள்ள தெப்பக்குளமேடு என்ற இடத்தில் குடிசைகள் அமைக்க முயற்சி செய்தனர். இதற்கு வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.
வனநில உரிமை பட்டா
இதையடுத்து அவர்கள் தாய்முடி எஸ்டேட் பகுதியில் காலியாக உள்ள குடியிருப்புகளில் 21 குடும்பங்களை சேர்ந்தவர்கள் தங்கி இருந்தனர். ஆனால் அவர்கள் தங்கள் பாரம்பரிய நடைமுறை களுடன் எஸ்டேட் பகுதியில் வாழ முடியாத நிலை இருப்பதால், தெப்பக்குளமேடு பகுதியில் இடம் ஒதுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து 21 குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு தெப்பக்குளமேடு பகுதியிலேயே தலா 1½ சென்ட் இடம் ஒதுக்கி வனநில உரிமை பட்டா வழங்கப்பட்டது. அங்கு அவர்கள் குடிசை அமைத்து குடியிருந்து வருகிறார்கள். அவர்களை வனத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.
குடிசைகள் அகற்றம்
இந்த நிலையில் மானாம்பள்ளி வனச்சரக அதிகாரி மணி கண்டன் தலைமையில் வனத்துறையினர் தெப்பக்குளமேடு பகுதிக்கு ரோந்து சென்றனர். அப்போது அவர்கள் திடீரென்று அங்கு போடப்பட்டு இருந்த 3 குடிசைகள் வனப்பகுதியை ஆக்கிரமித்து போட்டு இருப்பதாக கூறி அவற்றை அகற்றினார்கள்.
இதற்கு அந்த மலைவாழ் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வனத்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து கிராம மக்கள் கலெக்டர், சப்-கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை
இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள், வால்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்பகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அத்துடன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
நிலஅளவை அதிகாரிகள் மூலம் பட்டா இடத்தை அளவை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதன் பின்னர் நீங்கள் குடிசைகள் அமைக்கலாம் என்றும் தெரிவித்தனர். இதை மலைவாழ் மக்கள் ஏற்றுக்கொண்டனர்.
வனத்துறை மீது குற்றச்சாட்டு
இது குறித்து மலைவாழ் மக்கள் கூறும்போது, எங்களுக்கு வழங்கப்பட்ட பட்டா இடத்தில் நாங்கள் குடிசை அமைத்து உள்ளோம். ஆனால் வனத்துறையினர் எங்களை வாழவிடாமல் இடையூறு செய்து வருகிறார்கள். எனவே வனத்துறையினர் அத்துமீறாமல் இருக்க வேண்டும் என்றனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, மலைவாழ் மக்களுக்கு வழங்கப்பட்ட இடத்துக்கு பதிலாக வனப்பகுதியை ஆக்கிரமித்து குடிசை அமைத்ததால் நாங்கள் அவற்றை அகற்றினோம் என்றனர்.
Related Tags :
Next Story






