கூடுதல் இழப்பீடு கேட்டு விவசாயிகள் தர்ணா
கூடுதல் இழப்பீடு கேட்டு விவசாயிகள் தர்ணா
சுல்தான்பேட்டை
உயர் மின்கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீடு கேட்டு விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
உயர் மின்கோபுரங்கள்
தமிழகத்தில் விவசாய நிலங்கள் வழியாக உயர் மின்கோபுரம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே பாதிக்கப்பட்டு உள்ள விவசாயிகள் கூடுதல் இழப்பீடு கேட்டு பல்வேறு போராட்டங் களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கக்கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், தமிழக விவசாயிகள் போராட்டக்குழு சார்பில் சுல்தான்பேட்டை அருகே உள்ள ஓடக்கல்பாளையத்தில் இருக்கும் உயர் மின் கோபுரங்களில் குடியேறும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
விவசாயிகள் தர்ணா
இதையடுத்து அங்கு நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டு இருந்தது. இந்த நிலையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில துணைத்தலைவர் ஓடக்கல்பாளையம் தென்னவன் அரசேந்திரன் தலைமையில் விவசாயிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட அங்கு வந்தனர்.
உடனே அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதையடுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள், அங்கு அமர்ந்து தர்ணா வில் ஈடுபட்டனர். அத்துடன் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மனு கொடுத்தனர்
பின்னர் அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த கோரிக்கை மனுக்களை இன்ஸ்பெக்டர் மாதையனிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறும்போது, மின்கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, கோபுரம் அமைந்த இடத்தில் 100 சதவீதத்துக்கு பதில் 200 சதவீதமும், மின்கம்பி செல்லும் இடத்துக்கு 20 சதவீதத்துக்கு பதிலாக 100 சதவீதமும், ஐகோர்ட்டில் வழக்கு இருப்பதால் வழக்கு முடியும் வரை திட்டப்பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story