தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 3 Dec 2021 10:55 PM IST (Updated: 3 Dec 2021 10:55 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி


குண்டும் குழியுமான சாலை

கோவை அருகே உள்ள சின்னமேட்டுப்பாளையம் சாலை முதல் இடிகரை வரை சாலை பழுதடைந்து குண்டும்-குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருவதால், அவர்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகிறார்கள். அத்துடன் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே குண்டும் குழியுமான இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
விஜயராஜ், கோவை.

தினத்தந்தி செய்தி எதிரொலி:
சிறுவர் பூங்கா சீரமைக்கப்பட்டது 

  கோவை பீளமேடு லட்சுமிபுரம் சின்னசாமி லே-அவுட்டில் உள்ள சிறுவர் பூங்கா பராமரிப்பின்றி புதர் மண்டிக்கிடந்தது. இதனால் அந்தப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் அங்கு சென்று விளையாட முடியாமல் அவதியடைந்தனர். இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. அதன்பயனாக அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து பூங்காவில் புதர்களை அகற்றி சீரமைத்தனர். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.
  சந்தோஷ்குமார், பீளமேடு.

சுத்தமில்லாத கழிவறை

  கோவை மாநகராட்சி 20-வது வார்டு சீரநாயக்கன்பாளையம் சுகர்கேன் மெயின் ரோடு மாநகராட்சி பள்ளி அருகே கழிப்பிடம் உள்ளது. இந்த கழிவறை அருகே பல நாட்களாக தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகி பள்ளி மாணவர்களை கடிப்பதால் தொற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிப்பிடத்தை சுத்தமாக வைக்க வழிவகை செய்ய வேண்டும்.
  சந்திரன், சீரநாயக்கன்பாளையம்.

குப்பையான கிணறு

  பொள்ளாச்சி பி.கே.எஸ்.காலனி 4-வது தெருவில் உள்ள பாழடைந்த கிணற்றில் தண்ணீர் உள்ளது. இந்த கிணற்றில் குப்பைகள் நிறைந்து காணப்படுவதால், கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாவதுடன், பாதுகாப்பும் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் இந்த கிணற்றை சுத்தம் செய்வதுடன் பராமரிக்க வேண்டும்.
  நிஷா சதீஷ், பி.கே.எஸ்.காலனி.

ஆபத்தான மரக்கிளை 

  கோவையை அடுத்த பேரூரில் இருந்து புட்டுவிக்கி சாலைக்கு செல்லும் குளக்கரையில் ரோடு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ரோட்டின் ஓரத்தில் உள்ள மரத்தின் ஒரு கிளை காய்ந்து தொங்கியபடி உள்ளது. இது எந்த நேரத்திலும் கீழே விழுந்து விபத்தை ஏற்படுத்த வாய்ப்பு நிலவுவதால், இந்த வழியாக செல்பவர்கள் பயத்துடன் செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  ஜெயபிரகாஷ், பேரூர்.

சேறும், சகதியுமான சாலை

  கோவையை அடுத்து உள்ள பெரியநாயக்கன்பாளையத்தில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. தற்போது பெய்து வரும் மழை காரணமாக சாலையின் இருபுறத்திலும் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து சேறும் சகதியுமாக மாறியதை சீரமைக்க வேண்டும்.
  ஜெகதீஷ்பாபு, பெரியநாயக்கன்பாளையம்.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

  கோவை உருமாண்டம்பாளையம் காந்திநகரில் இருந்து நல்லாம்பாளையம் செல்லும் சாலையின் ஓரத்தில் ஏராளமான குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளன. இந்த குப்பைகள் சுத்தம் செய்யப்படாததால், அந்த வழியாக செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. அத்துடன் தெருநாய்கள் குப்பைகளை சாலையில் இழுத்து போடுவதால், விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே இங்கு குவிந்துள்ள குப்பைகளை அகற்ற வேண்டும்.
  தண்டபாணி, கோவை.

குடிநீரில் கழிவுநீர் கலப்பு

  பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டி 10-வது வார்டு மகாலட்சுமி அவன்யூவில் அடிப்படை வசதி எதுவும் இல்லை. அத்துடன் அங்கு வினியோகிக்கப்பட்டு வரும் குடிநீரில் சாக்கடை கழிவுநீர் கலந்து வருகிறது. மேலும் வீடுகளுக்கு முன்பு தண்ணீர் தேங்கி நிற்பதால் வீதி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல அவதியடைந்து வருகிறார்கள். எனவே இங்கு சுத்தமான குடிநீர் வினியோகம் செய்வதுடன், அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும்.
  சக்தி தீபா, சூளேஸ்வரன்பட்டி.

விபத்தை ஏற்படுத்தும் ரோடு

  கோவையை அடுத்த வடகோவையில் மேம்பாலம் உள்ளது. காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் இருந்து இந்த சாலையில் ஏறும் பகுதியின் இடதுபுறம் சாலை உள்ளது. இந்த சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. அத்துடன் தற்போது பெய்த மழையால் குழிகள் நிரம்பி இருப்பதால் குழிகள் இருப்பது தெரியவில்லை. இதனால் அங்கு அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன. எனவே விபத்தை ஏற்படுத்தும் இந்த ரோட்டை அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும்.
  சசிகுமார், வடகோவை.

மருத்துவ கழிவுகளால் அவதி

  சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பி.ஆர்.நகரில் அதிகளவில் ஓட்டல் கழிவுகளுடன் சேர்த்து மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அந்தப்பகுதியில் பொதுமக்கள் செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். இதன் காரணமாக தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த கழிவுகளை அகற்றுவது டன், மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.
  சந்தானம், பி.ஆர்.நகர்.

கழிவுநீர் தேக்கம்

  கோவை சவுரிபாளையம் கருணாநிதி நகர் தண்ணீர் தொட்டி அருகே கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யப்படவில்லை. இதனால் கழிவுநீர் அங்கு அதிகளவில் தேங்கி நிற்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. அத்துடன் கொசுத்தொல்லையும் அதிகமாக இருக்கிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாயை முறையாக சுத்தம் செய்ய வேண்டும்.
  சந்தோஷ், சவுரிபாளையம்.


Next Story