சென்னை விமான நிலையத்தில் ரூ.65½ லட்சம் தங்கம், வெளிநாட்டு பணம், எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் ரூ.65½ லட்சம் தங்கம், வெளிநாட்டு பணம், எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 5 Dec 2021 8:36 AM GMT (Updated: 2021-12-05T14:06:47+05:30)

சென்னை விமான நிலையத்தில் ரூ.65 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள தங்கம், எலக்ட்ரானிக் பொருட்கள், வெளிநாட்டு பணம் ஆகியவற்றை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தங்கம் பறிமுதல்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அதில் 2 பயணிகள் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அவர்களது உடமைகளை சோதனை செய்தனர்.

அதில் கண்ணாடி பாட்டிலில் சாம்பிராணி தூள் இருந்தது. சந்தேகத்தின்பேரில் அதனை ஆய்வு செய்தபோது சாம்பிராணி தூளுக்குள் தங்க கட்டிகள், தங்க சங்கிலி ஆகியவற்றை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர்.

மேலும் அவர்களிடம் எலக்ட்ரானிக் பொருட்களும் இருந்தன. 2 பேரிடம் இருந்தும் ரூ.26 லட்சம் மதிப்புள்ள 601 கிராம் தங்கம் மற்றும் ரூ.18 லட்சம் மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வெளிநாட்டு பணம்

அதேபோல் சென்னையில் இருந்து துபாய் சென்ற விமானத்தில் பயணம் செய்ய வந்த 2 பயணிகளிடம் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் அவர்களிடம் ரூ.21 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள சவுதி ரியால்களை கைப்பற்றினர்.

சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் மொத்தம் ரூ.65 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள தங்கம், எலக்ட்ரானிக் பொருட்கள், சவுதி ரியால்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story