அயப்பாக்கம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் அமைச்சர் ஆய்வு
அயப்பாக்கம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் தமிழக வீட்டு வசதி வாரிய துறை அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார்.
திருமுல்லைவாயல் அடுத்த அயப்பாக்கம் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு சுமார் 10 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. சமீபத்தில் பெய்த மழையால் இந்த பகுதியில் உள்ள சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. மழைநீருடன் கழிவுநீரும் கலந்து இருப்பதால் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் அந்த பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
அத்துடன் குப்பைகள் முறையாக அகற்றப்படாமல் ஆங்காங்கே சாலையில் தேங்கி கிடப்பதாகவும், குடிநீரும் சரியாக இல்லை எனவும் குற்றம்சாட்டி பொதுமக்கள், பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தினர்.
இந்தநிலையில் நேற்று மாலை தமிழக வீட்டு வசதி வாரிய துறை அமைச்சர் முத்துசாமி, அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிக்கு வந்து அங்கு தேங்கி நிற்கும் மழைநீரில் நடந்து சென்று சுமார் 4 மணி நேரம் ஆய்வு செய்தார். அப்போது அவர், “இவற்றையெல்லாம் சரி செய்வதற்கு எங்களுக்கு கால அவகாசம் தேவை. அடுத்த மழை காலத்துக்குள் எல்லாவற்றையும் சரி செய்து முடிக்கப்படும்” என்றார்.
ஆய்வின்போது மதுரவாயல் எம்.எல்.ஏ. காரம்பாக்கம் கணபதி, அயப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் துரை வீரமணி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story