மேட்டுப்பாளையம் ஊட்டி ரெயில் தண்டவாளத்தில் மீண்டும் மண்சரிவு
மேட்டுப்பாளையம் ஊட்டி ரெயில் தண்டவாளத்தில் மீண்டும் மண்சரிவு
மேட்டுப்பாளையம்
தொடர் மழை காரணமாக மேட்டுப்பாளையம் -ஊட்டி ரெயில் தண்டவாளத்தில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் 14-ந் தேதி வரை மலைரெயில் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
மலை ரெயில்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கும், ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கும் மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அதில் பயணம் செய்து இயற்கை அழகை ரசிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்த நிலையில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. கடந்த மாதம் 22-ந் தேதி பெய்த மழை காரணமாக மேட்டுப்பாளையம் -ஊட்டி மலை ரெயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் மலை ரெயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டது. பின்னர் அந்த ரெயில் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திற்கு மீண்டும் இயக்கி வரப்பட்டது.
தண்டவாளத்தில் மண் சரிவு
அதைத்தொடர்ந்து ரெயில் பாதையை சீரமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வந்தது. இதற்காக கடந்த மாதம் 22-ந் தேதி முதல் நாளை (செவ்வாய்க்கிழமை) வரை மேட்டுப்பாளையம் -ஊட்டி மலை ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரு கிறது. இதனால் மேட்டுப்பாளையம் -ஊட்டி மலை ரெயில் பாதையில் மீண்டும் மீண்டும் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டது. இதில், கல்லாறு- அடர்லி, அடர்லி-ஹில்-குரோவ் ரெயில் நிலையங்கள் இடையே மண் சரிவு ஏற்பட்டு ரெயில் தண்டவாளத்தில் பெரிய மற்றும் சிறிய பாறாங் கற்கள் உருண்டு விழுந்தன. இதனால் ரெயில் தண்டவாளத்தை மண் மூடியது.
சீரமைக்கும் பணி
இதையடுத்து ரெயில் தண்ட வாளத்தில் விழுந்த ராட்சத பாறைகளை வெடி வைத்து தகர்ப்பதற்காக ரெயில்வே ஊழியர்கள் மேட்டுப்பாளை யத்தில் இருந்து பி.டி. ரெயிலில் புறப்பட்டனர். அவர்கள், கம்ப்ரசர் எந்திரம், கல்லாறு ரெயில் நிலையத்தில் பொக்லைன் எந்திரம் உள்ள சாதனங்களுடன் மண் சரிவு ஏற்பட்ட இடத்தை அடைந்தனர்.
மலை ரெயில் இருப்புப்பாதை பிரிவு என்ஜினீயர் விவேக் குமார், உதவி என்ஜினீயர் கண்ணபிரான் ஆகியோர் மேற்பார்வையில் ரெயில்வே தொழிலாளர்கள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து ரெயில் பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
14-ந் தேதி வரை ரத்து
ரெயில் தண்டவாளங்களில் கிடக்கும் பாறாங்கற்களில் எந்திரம் மூலம் துளையிடப்பட்டு வெடிமருந்து நிரப்பி பாறைகள் தகர்க்கப்பட்டு வருகின்றன. வெடித்துச் சிதறிய பாறைகள் வாகனம் மூலம் ரெயில் தண்டவாளத்தில் இருந்து அகற்றப்படுகின்றன.ரெயில் பாதையை சீரமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
தொடர் மழை, மண்சரிவால் ரெயில் தண்டவாளத்தில் விழுந்த பாறைகளை அகற்றும் பணி உள்ளிட்டவை காரணமாக மேட்டுப்பாளையம் -ஊட்டி மலை ரெயில் சேவை மற்றும் ஊட்டி- மேட்டுப்பாளையம் மலை ரெயில் வருகிற 14-ந் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.
Related Tags :
Next Story