வால்பாறை எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு


வால்பாறை எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு
x
தினத்தந்தி 6 Dec 2021 10:56 AM IST (Updated: 6 Dec 2021 10:56 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறை எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு

வால்பாறை

வால்பாறை எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. 

காட்டு யானைகள் முகாம்

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு இந்த ஆண்டு கேரள வனப்பகுதியில் இருந்து அதிகளவில் கூட்டம் கூட்டமாக வந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த யானைகள் தேயிலை தோட்ட பகுதிகளில் கூட்டம், கூட்டமாகவும், சில இடங்களில் தனியாகவும் முகாமிட்டு வருகின்றன.  

இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக தோணிமுடி, ஹைபாரஸ்ட், நல்லமுடி, ஆனைமுடி உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் முகாமிட்டு உள்ளன. இதனால் பொதுமக்கள் மற்றும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பீதியடைந்து உள்ளனர். 

காட்சிமுனைக்கு செல்ல தடை

காட்டு யானைகள் தொடர்ந்து முகாமிட்டு வருவதால், நல்லமுடி பூஞ்சோலை பள்ளத்தாக்கு காட்சிமுனைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர்.

தற்போது, வால்பாறையில் குளிர் பனிக்காலம் தொடங்கியுள்ளதால், பகலில் வெயிலும், இரவில் கடும் குளிருடன் கூடிய பனிமூட்டமும் நிலவி வருகிறது. இதனை அனுபவிக்க பல்வேறு பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. 

ஏற்கனவே சின்னக்கல்லார் பகுதிக்கு செல்ல வனத்துறையினர் தடைவிதித்துள்ள நிலையில், நல்லமுடி காட்சிமுனைக்கு செல்லவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளதால், அங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை உள்ளது.
1 More update

Next Story