கிணத்துக்கடவு சந்தையில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு


கிணத்துக்கடவு சந்தையில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு
x
தினத்தந்தி 6 Dec 2021 10:56 AM IST (Updated: 6 Dec 2021 10:56 AM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவு சந்தையில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு சந்தையில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்தது. ஒரு கிலோ ரூ.114-க்கு ஏலம் போனது.

தக்காளி விலை உயர்வு

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்ததால் தக்காளியில் செடிகள் பெருமளவு பாதிக்கப்பட்டது. இதனால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டது. இந்த செடிகள் மழையால் அழுகியதால், தக்காளி உற்பத்தி குறைந்துள்ளது.

 இதனால் கிணத்துக்கடவு தினசரி சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்த அளவிலேயே உள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள் போட்டிப்போட்டு ஏலம் எடுத்து செல்கின்றனர்.

கிலோ ரூ.114-க்கு ஏலம்

நேற்று நடைபெற்ற ஏலத்தில் ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ.114-க்கு விற்பனையானது. இதே கடந்த 30-ந் தேதி ஒரு கிலோ தக்காளி ரூ.84-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 4 நாட்களில் ஒரு கிலோ தக்காளிக்கு ரூ.30-ரூபாய் விலை அதிகரித்துள்ளது. 

சில்லறை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.120 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்படுகிறது. 

வரத்து குறைவு

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-
கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழையின் காரணமாக தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தைக்கு வரும் தக்காளியின் அளவு குறைந்துள்ளது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 1,500 பெட்டி தக்காளி மட்டுமே வந்தது. 

இதனை வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்த வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்ததால், விலை கிடுகிடுவென உயர்ந்தது.

கிணத்துக்கடவு பகுதியில் மழை குறைந்த பின்னர் சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது தான் விலை குறையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story