கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்தது
கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்தது
கோவை
கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு நடுரோட்டில் கார் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்
கோவை நியூசித்தாபுதூர் திருமலைசாமி வீதியை சேர்ந்தவர் நஞ்சப்பன் (வயது 75). இவர் கோவை கோர்ட்டில் நீதிபதியின் உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.
இவர் ஓய்வூதியம் தொடர்பாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கருவூலத்துக்கு நேற்று காலை தனது காரில் வந்தார். அங்கு அவர் வேலையை முடித்துவிட்டு மீண்டும் காரில் புறப்பட்டு கலெக்டர் அலுவலகத்துக்கு வெளியே வந்தார். அப்போது அவருடைய காரின் முன்பகுதியில் இருந்து திடீரென்று கரும்புகை கிளம்பியது.
கார் தீப்பிடித்தது
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நஞ்சப்பன் உடனடியாக காரை ஓரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். இதையடுத்து ஒரு சில நிமிடங்களில் கார் மளமளவென தீப்பிடித்து எரிந்தது. அப்போது தீயின் வெப்பம் தாங்காமல் காரின் கண்ணாடி வெடித்து சிதறியது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் வேறு வழியில் திருப்பி விடப்பட்டன.
எரிந்து நாசம்
கார் தீப்பிடித்து எரிவதை பார்த்த கலெக்டர் அலுவலக ஊழியர்கள் தீயை அணைக்கும் கருவிகளை கொண்டு அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இது குறித்து தகவல் அறிந்த கோவை தெற்கு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் அவர்கள் வாளியில் தண்ணீர் பிடித்து ஊற்றி தீயை அணைத் தனர். ஆனாலும் தீ அணைய வில்லை. இதையடுத்து தீயணைப்பு வாகனத்தில் இருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை முற்றிலும் அணைத்தனர். ஆனால் அதற்குள் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. கரும்புகை வந்த உடன் காரில் இருந்து கீழே இறங்கியதால் நஞ்சப்பன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
கலெக்டர் பார்வையிட்டார்
இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்ற னர். காரின் குளிர்சாதன வசதியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக காரில் தீப்பிடித்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த கலெக்டர் சமீரன் தீப்பிடித்து எரிந்த காரை பார்வையிட்டார். மேலும் அங்கிருந்த போலீசாரிடம் தீ விபத்து குறித்து கேட்டறிந்தார். நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story