பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ குழுவினர் ஆய்வு


பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ குழுவினர் ஆய்வு
x
தினத்தந்தி 6 Dec 2021 10:42 PM IST (Updated: 6 Dec 2021 10:42 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ குழுவினர் ஆய்வு

பொள்ளாச்சி

மத்திய அரசு மூலம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் தாலுகாவில் செயல்படும் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு தேசிய தர சான்று வழங்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு தேசிய தரச் சான்று வழங்கப்பட்டது.

 அதன்படி ஒரு படுக்கைக்கு ரூ.10 ஆயிரம் வீதம் கடந்த 3 ஆண்டுகளாக வந்தது. இந்த நிலையில் தேசிய தரச் சான்றுக்கு மீண்டும் விண்ணப்பிக்கப்பட்டது. 

இதை தொடர்ந்து தேசிய தரச்சான்று பெற்ற ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் 4 பேர் கொண்ட டாக்டர்கள் குழு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று வந்தது. இந்த குழுவில் உள்ள டாக்டர்கள் அசோக், ராஜாசெல்வம், செவிலியர் அனுசியா ஆகியோர் கொண்ட குழு தனி, தனியாக பிரிந்து சென்று ஒவ்வொரு வார்டாக ஆய்வு நடத்தினார்கள்.

சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தனர்

அப்போது, நோயாளிகளிடம் உடல் நலம் குறித்தும், ஆஸ்பத்திரியில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் விசாரித்தனர். தொடர்ந்து வார்டில் உள்ள டாக்டர்கள், செவிலியர்களிடமும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தனர். 

ஆய்வின் போது கண்காணிப்பாளர் டாக்டர் கலைசெல்வி, மருத்துவ இருப்பிட அலுவலர் டாக்டர் சரவணபிரகாஷ் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் உள்பட பலர் இருந்தனர். தொடர்ந்து இன்றும், நாளையும் மருத்துவ குழுவினர் ஆய்வு நடத்த உள்ளனர்.

இதுகுறித்து டாக்டர்கள் குழுவினர் கூறியதாவது:-

தேசிய தரச்சான்று

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் தேசிய தரச்சான்று வழங்குவது குறித்து மாநில அளவிலான குழுவினர் ஆய்வு நடத்தி வருகிறது. பிரசவம், குழந்தைகள் பகுதி, வெளிநோளாளிகள், உள்நோயாளிகள், அவசர சிகிச்சை பகுதி, அறுவை சிகிச்சை அரங்கு, ஆய்வகம், குடும்ப நல பகுதி உள்பட 18 துறைகளில் தொடர்ந்து 3 நாட்கள் ஆய்வு நடத்தப்படும். 

ஆய்வில் கண்டறியப்படும் குறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டு, அவற்றை நிவர்த்தி செய்வதற்கு காலஅவகாசம் வழங்கப்படும். அதன்பிறகு 30 நாட்களில் டெல்லியில் இருந்து மருத்துவ குழுவினர் வந்து ஆய்வு செய்து விட்டு மத்திய அரசுக்கு தேசிய தர சான்று வழங்குவது குறித்து பரிந்துரை செய்வார்கள். 

ஆஸ்பத்திரியில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், பணியாளர்கள் பாதுகாப்பு, நோயாளிகளை அழைத்து செல்லும் சக்கர நாற்காலிகளில் பெல்ட் உள்ளதா? ஸ்கேன் மையம் சரியாக செயல்படுகிறதா? அவற்றின் உரிமம் புதுபிக்கப்பட்டு உள்ளதா? என்பது உள்பட பல்வேறு வசதிகள் குறித்து ஆய்வு நடத்தப்படும். 

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் 462 படுக்கை வசதி உள்ளது. தேசிய தர சான்று கிடைத்தால் ஒரு படுக்கைக்கு ரூ.10 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். தொடர்ந்து 3 ஆண்டுகள் இந்த நிதியைபெற்றுக்கொள்ளலாம்.

 அதன்பிறகு ஆஸ்பத்திரி நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வந்தால் தொடர்ந்து நிதி வழங்கப்படும். இந்த நிதியின் மூலம் ஆஸ்பத்திரியில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள முடியும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story