ஆந்திராவில் இருந்து வேனில் கடத்திய 640 கிலோ கஞ்சா பறிமுதல்
ஆந்திராவில் இருந்து சென்னை வழியாக தேனி மாவட்டம் கம்பத்துக்கு வேனில் கடத்தி வரப்பட்ட 640 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கஞ்சா கடத்தல்
தமிழகத்தில் சமீபத்தில் பெய்த பெரும் மழையை பயன்படுத்தி கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு கடத்தி வரப்படுவதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மழை வெள்ள மீட்பு பணிகளில் போலீசாரின் கவனம் இருப்பதை பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தல் கும்பல் தங்களது கடத்தல் வேட்டையை அதிக அளவில் நடத்தியதாக சொல்லப்படுகிறது. ஆனால் மத்திய போதைப்பொருள் தடுப்பு போலீசார் மிகவும் விழிப்போடு செயல்பட்டு கடத்தல் காரர்களை வேட்டையாடி பிடித்தனர்.
ஆந்திர மாநிலம் துனி என்ற இடத்தில் இருந்து கஞ்சா கடத்தி வரப்பட்ட வேனை, சென்னை அருகே உள்ள காரனோடை சுங்கச்சாவடியில் வைத்து மடக்கினார்கள். வேன் நிறைய கடத்திவரப்பட்ட 640 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 296 பைகளில் அந்த கஞ்சா நிரப்பி வைக்கப்பட்டிருந்தது.
3 பேர் கைது
ஆந்திராவில் இருந்து சென்னை வழியாக தேனி மாவட்டம் கம்பத்துக்கு இந்த கஞ்சா கடத்திச்செல்லப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. வேன் டிரைவர் கைது செய்யப்பட்டார். கஞ்சா பொட்டலங்களுடன் வேனும் பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சாவை வேனில் ஏற்றி அனுப்பிவிட்டு, பஸ்சில் சென்ற கஞ்சா வியாபாரி பெரம்பலூரில் கைதானார். இதில் தொடர்புடைய இன்னொரு கஞ்சா வியாபாரியும் சென்னையில் கைது செய்யப்பட்டார். மொத்தம் 3 பேர் கைதானார்கள்.
ஆந்திராவில் இருந்து கடத்தி செல்லப்படும் கஞ்சா இலங்கை, மாலத்தீவு போன்ற நாடுகளுக்கு தூத்துக்குடி மற்றும் ராமேஸ்வரத்தில் இருந்து கடல் மார்க்கமாகவும் கொண்டு செல்லப்படுவதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story