கோவை கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி


கோவை கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 7 Dec 2021 10:35 PM IST (Updated: 7 Dec 2021 10:35 PM IST)
t-max-icont-min-icon

கோவை கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

கோவை

கடனை திரும்ப கேட்டபோது மிரட்டல் விடுத்ததால் கோவை கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி செய்தார். அவர் டீசலை உடலில் ஊற்றுவதற்குள் போலீசார் பறித்தனர். 

தீக்குளிக்க முயற்சி

கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று மதியம் 1.30 மணிக்கு ஒரு பெண் தனது கணவருடன் கலெக்டர் அலுவலகம் வந்தார். 

அலுவலக வளாகத்துக்குள் அவர் நடந்து சென்றபோது திடீரென்று அந்த பெண், தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலை எடுத்து திறந்து, அதில் இருந்த டீசலை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதை பார்த்ததும், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

போலீசார் பறித்தனர் 

உடனே அவர்கள் அங்கு ஓடிச்சென்று, அந்த பெண் தனது உடலில் டீசலை ஊற்றுவதற்குள் அந்த பாட்டிலை பறித்தனர். பின்னர் போலீசார் அந்த பெண் மற்றும் அவருடைய கணவரிடம் விசாரணை நடத்தினார்கள். 

அதில் அந்த பெண் மதுக்கரை அருகே உள்ள மரப் பாலத்தை சேர்ந்த முத்துமாரி (வயது 45) என்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், அந்த பெண் ரெடிமேடு சுற்றுச் சுவர், கழிவறை தொட்டி அமைக்கும் தொழில் செய்து வருவதாகவும், அதே தொழில் செய்து வரும் ஒருவருக்கு கொடுத்த கடன் ரூ.13 ஆயிரத்தை திரும்ப கேட்டதற்கு அவர் கொலை மிரட்டல் விடுத்த தாகவும், இது குறித்து மதுக்கரை போலீசில் புகார் செய்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்காததால் தற்கொலை செய்ய முயற்சித்தது தெரிய வந்தது. 

எச்சரித்து அனுப்பினர் 

இதையடுத்து போலீசார் அந்த பெண் மற்றும் அவருடைய கணவர் ஆகியோரை இதுபோன்று செய்யக்கூடாது என்று எச்சரித்து அனுப்பி னார்கள். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் மனு கொடுத்துவிட்டு திரும்பி சென்றனர். 

கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


Next Story