புகார் பெட்டி
புகார் பெட்டி
போக்குவரத்துக்கு இடையூறு
கோத்தகிரி ராம்சந்த் சதுக்கம் பகுதியில் சக்திமலை சாலைக்கு செல்லும் வழியில் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுகின்றன. இதனால் அந்த வழியாக போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதை அதிகாரிகள் முறைப்படுத்த வேண்டும்.
ஷிஜினி, கோத்தகிரி.
குடிநீர் குழாயில் உடைப்பு
கோவை குனியமுத்தூர் முத்து மாரியம்மன் கோவில் அருகில் சாலைக்கு அடியில் புதைக்கப்பட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக செல்கிறது. இதனால் அந்த பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. மேலும் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும்.
சித்து, குனியமுத்தூர்.
விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
கோவை மாநகராட்சி 20-வது வார்டு கருமலை செட்டிபாளையம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வீதியில் குறுகிய அளவிலான சாலையே உள்ளது. இந்த சாலையில் பாதாள சாக்கடை மூடிகள் சாலைக்கு தகுந்தாற்போல் அல்லாமல் உயரமாக வைக்கப்பட்டு உள்ளன. இதனால் அந்த வழியாக நடந்து செல்பவர்கள் தடுமாறி விழும் நிலை காணப்படுகிறது. மேலும் இருசக்கர வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரிஷ்குமார், கே.சி.பாளையம்.
அபாயகரமான மரம்
கோவையில் வடவள்ளி செல்லும் சாலையோரத்தில் கவுலிபிரவுன் சிக்னல் அருகே சாய்ந்து விழும் நிலையில் அபாயகரமான மரம் ஒன்று நிற்கிறது. பலத்த காற்று வீசும்போது அந்த மரம் சாய்ந்து விழ வாய்ப்பு உள்ளது. அப்போது அந்த வழியாக செல்பவர்கள் மீது விழுந்தால், உயிரிழப்பு ஏற்படலாம். எனவே அதற்கு முன்னதாக மரத்தை வெட்டி அகற்ற வேண்டும்.
சித்ரா, கோவை.
வாகன நிறுத்துமிடம்
கூடலூர் பழைய பஸ் நிலையம், அக்ரஹாரத் தெரு, ஊட்டி மெயின் ரோடு, ராஜகோபாலபுரம் ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கான இட வசதி இல்லாததால் பெரும் சிரமம் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து விதிமுறைகளின்படி வாகன நிறுத்த இடவசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவா, கூடலூர்.
சேறும், சகதியுமான சாலை
ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் சாலையில் விரிவாக்க பணி கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. ஆனால் இதுவரை பணி நிறைவு பெறவில்லை. இதனால் டி.ஆர். பஜார், மேல் கூடலூர் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் மழைக்காலத்தில் சாலை சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. எனவே விரிவாக்க பணியை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகராஜ், கூடலூர்.
வனவிலங்குகள் தாக்குதல்
பந்தலூர் அருகே கோட்டப்பாடி முதல் மழவன்சேரம்பாடி வரை செல்லும் சாலையோரத்தில் முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்து காணப்படுகின்றன. அதில் காட்டுயானைகள் நின்றால் கூட தெரிவது இல்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் வனவிலங்குகளின் தாக்குதலுக்கு ஆளாகும் நிலை உள்ளது. எனவே அந்த முட்புதர்களைவெட்டி அகற்ற வேண்டும்.
தனபால், மழவன்சேரம்பாடி.
புதர் செடிகளால் அவதி
கிணத்துக்கடவு சுடுகாடு சாலையில் இருந்து கோதவாடி சொல்லும் சாலையின் இருபுறங்களிலும் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனை சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள புதர் செடிகளை அகற்ற வேண்டும்.
ரவி, கோதவாடி.
கூடுதல் பஸ்கள்
பொள்ளாச்சி புதிய பஸ் நிலையத்தில் இருந்து வால்பாறைக்கு அரசு பஸ்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் இயக்கப்படுகிறது. போதிய எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்படாததால் வால்பாறைக்கு செல்லும் பயணிகள் கால்கடுக்க புதிய பஸ் நிலையத்தில் இருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே பயணிகள் நலனை கருத்தில் கொண்டு பஸ் நிலையத்தில் போதிய இருக்கைகள் அமைக்கவும், கூடுதல் பஸ்கள் இயக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செந்தில்வேல், பொள்ளாச்சி.
கால்வாயில் அடைப்பு
பந்தலூர் அருகே கொளப்பள்ளி பஜாரில் உள்ள கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கால்வாய் அடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முத்துக்குமார், கொளப்பள்ளி.
குண்டும், குழியுமான சாலை
கோவை சுண்டப்பாளையம் சாலையில் பல்வேறு இடங்களில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் திடீரென பழுதாகி நின்று விடுகின்றன. மேலும் பாதசாரிகளும் தடுமாறி விழும் நிலை உள்ளது. இது தவிர விபத்துகளும் அதிகரித்து வருகிறது. எனவே அந்த சாலையை சம்பந்தப்பட்ட துறையினர் சீரமைக்க வேண்டும்.
ரங்கராஜ், கோவை.
Related Tags :
Next Story